திருக்குறள் - நம் கடமை
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன ? இதன் நோக்கம் என்ன ? எதற்காக பிறந்தோம் ? எதற்காக வாழ்கிறோம் ? நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்வது சரிதானா ? இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன கிடைக்கும் ? எதில் முடியும் ?
இப்படி வாழ்வின் சில விடை காண முடியாத கேள்விகள் நம்முள் எழுவது இயற்கை.
இதற்கு எப்படி விடை காண்பது ? வாழ்வின் குறிக்கோள், வாழ்வில் செய்ய வேண்டிய கடமை என்ன ?
வள்ளுவர் வழி சொல்கிறார். கோடி காட்டுகிறார். பாதையை காட்டுகிறார். அதில் பயணிக்க வேண்டியது நம் பொறுப்பு.
தவஞ்செய்வார் தம்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.
வாழ்வின் நோக்கம் தவம் செய்வது. அதைத் தவிர மற்றது எல்லாம் ஆசை வயப்பட்டு துன்பம் செய்வதாகும்.
கொஞ்சம் விரித்துப் பொருள் காண்போம்.
தவஞ்செய்வார் தம்கருமஞ் செய்வார் = தவம் செய்பவர்கள் தங்கள் கடமையை செய்பவர்கள்.
மற் றல்லார் = மற்றவர்கள் , அதாவது தவம் செய்யாதவர்கள்
அவஞ்செய்வார் = துன்பம் செய்வார்
ஆசையுள் பட்டு = ஆசையுள் பட்டு
மீண்டும் மீண்டும் பிறந்து பின் இறந்து இந்த சுழலில் சிக்கித் துன்புறும் உயிரை அந்த துன்பத்தில் இருந்து மீட்டு வீடு பேறு அடையச் செய்வதே இந்த வாழ்க்கையின் நோக்கம்.
வீடு வாங்குவது, நகை நட்டுகள் வாங்குவது, ஊர் சுற்றுவது, உண்பது, உடுப்பது இவற்றிற்காக நாம் இந்த பிறவியை எடுக்க வில்லை.
மனித வாழ்வின் நோக்கம், குறிக்கோள், பயன் பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவது . அதற்க்கு ஒரே வழி தவம் செய்வது.
அதை விடுத்து செய்யும் மற்றது எல்லாம் பிணி மூப்பு சாக்காடு என்ற முத்துன்பத்தில் இருந்து விடுபடாமல் அதிலேயே மீண்டும் மீண்டும் சிக்க வைப்பது.
தவம் உடலுக்கு துன்பம் தரக்கூடியது. உயிருக்கு நன்மை தரக் கூடியது.
தவம் அல்லாத மற்றது உடலுக்கு சில காலம் இன்பம் தரலாம் பின் அதே இன்பம் துன்பமாக மாறி விடும். அது மட்டும் அல்ல, அது உடலைத் தாண்டி உயிர்க்கும் துன்பம் தரும்.
எப்படி ?
தவம் அல்லாத மற்றவைகளை செய்யும் போது, பாவ புண்ணியம் நிகழ்கிறது. அவற்றை அனுபவிக்க இந்த உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டி வரும்.
என்ன செய்கிறோம்...எதற்கு செய்கிறோம் என்று யோசித்துச் செய்யுங்கள்.
நன்றாக யோசித்த வள்ளுவர் சொல்கிறார் - தவம் செய்யுங்கள் என்று.
அப்புறம் உங்க இஷ்டம்....
"தவம் செய்பவர், தனது கடமையை செய்பவர் என்று இரண்டு விதமானவர்கள் தவிர்த்து, மற்ற எல்லோரும் ஆசையுள் பட்டுத் துன்பம் அடைவர்" என்றும் கொள்ளலாமோ?
ReplyDeleteஒன்று தனது கடமையை செய்ய வேண்டும், அல்லது எல்லாம் துறந்து தவம் செய்ய வேண்டும்.
அது அல்ல அர்த்தம்.
Deleteதவம் செய்வதுதான் கடமை.
தவம் செய்யாமல் மற்றவற்றை செய்வது "அவம் செய்வது" ஆகும்