வில்லி பாரதம் - உன் அருளுக்கு அஞ்சினேன்
தருமன் , கிருஷ்ணனிடம், நாட்டில் பாதி கேள், அது தராவிட்டால் ஐந்து ஊர் கேள், அதுவும் தராவிட்டால் ஐந்து வீடு கேள், அதுவும் தராவிட்டால் போரைக் கேள் என்று சொன்னான்.
அதை கேட்டு பீமன் கோபம் கொண்டான்.அன்று அரசவையில் திரௌபதி வெட்கப் பட்டு வேதனையில் நின்றபோது , அண்ணா, நீ எங்களைத் தடுத்தாய். நாம் காடு போகவும்,அஞ்ஞாத வாசம் போகவும் நீயே காரணம் ஆனாய். துரியோதனின் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.
துரியோதன் கொடுமை செய்தான். அந்த கொடுமையை எப்படியாவது சண்டைபோட்டு , அவனை வென்று, அந்த கொடுமைகளை குறைத்துக் கொள்ள முடியும். ஆனால், அண்ணா, உன் அருள் உள்ளத்தினால் படும் பாட்டை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் கொடுமையை விட உன் அருளுக்கு அஞ்சினேன் என்றான்.
பாடல்
விரிகுழற்பைந் தொடிநாணிவேத்தவையின் முறையிடு நாள்
வெகுளே லென்று,
மரபினுக்கு நமக்குமுல குள்ளளவுந் தீராதவசையேகண்டாய்,
எரிதழற் கானகமகன்று மின்னமும் வெம்பகை முடிக்க
விளையாநின்றாய்,
அரவுயர்த்தோன் கொடுமையினு முரசுயர்த்தோயுனதருளுக்
கஞ்சினேனே.
சீர் பிரித்த பின்
விரி குழல் பைந்தொடி நாணி வேந்தர் அவையில் முறையிடும் நாள்
வெகுளேல் என்று,
மரபினுக்கும் நமக்கும் குலம் உள்ள அளவும் தீராத வசையே கண்டாய்,
எரிதழல் கானகம் அகன்று பின்னமும் வெம்பகை முடிக்க
விளையா நின்றாய்,
அரவு உயர்த்தோன் கொடுமையினும் முரசு உயர்த்தோய் உனது அருளுக்கு அஞ்சினேனே
பொருள்
விரிகுழல் = முடியை அவிழ்த்து விட்டு நின்ற
பைந்தொடி = சிறந்த தொடி என்ற கையில் அணியும் அணிகலனை அணிந்த திரௌபதி
நாணி = வெட்கப்பட்டு
வேந்தர் அவையில் = அரசவையில்
முறையிடும் நாள் = முறையிட்ட அந்த நாளில்
வெகுளேல் என்று = கோபம் கொள்ளாதே என்று
மரபினுக்கும் = அரச மரபினுக்கும்
நமக்கும் = நமக்கும்
குலம் உள்ள அளவும் = நமது அரச குலம் உள்ள அளவும்
தீராத வசையே கண்டாய் = என்றும் தீராத வசை (பழி சொல்லை ) தேடிக் கொண்டாய்
எரிதழல் கானகம் அகன்று = எரியும் காட்டிற்கு சென்று
பின்னமும் வெம்பகை முடிக்க = பின்னமும் பகையை முடிக்க
விளையா நின்றாய் = விரும்பால் நிற்கிறாய் (சமாதானம் பேசிக் கொண்டு )
அரவு உயர்த்தோன் = அரவக் கொடியோன் (துரியோதனன்)
கொடுமையினும் = செய்யும் கொடுமையிலும்
முரசு உயர்த்தோய் = முரசுக் கொடியை கொண்டவனே
உனது அருளுக்கு அஞ்சினேனே = உனது அருளுக்கு அஞ்சினேன்
சரியான பேச்சுதான்.
ReplyDelete