குசேலோபாக்கியானம் - ஊர் வளம்
எத்தனையோ இலக்கியங்களில் ஊர் வளம் பற்றிப் படித்து இருக்கிறோம். ஆனால், குசேலோபாக்கியானம் போல ஒரு வர்ணனையை பார்த்து இருக்க
முடியாது.
இந்த பொருள்களில் என்ன சுகம் இருக்கிறது என்று அவற்றை வெறுத்து துறவறம் போனவர்கள் கூட இந்த ஊருக்கு வந்தால் அடடா நாம் இதை எல்லாம் இழந்து விட்டோமே என்று எண்ணி வருந்தும் அளவுக்கு அந்த ஊரில் செல்வம் நிறைந்து கிடந்தது.
சரி, துறவிகள் பாடு அப்படி என்றால் இல்லறத்தில் இருப்பவர்கள் சங்கடம் வேறு மாதிரி இருந்தது.அந்த ஊரில் உள்ளவர்கள் விருந்து என்று வந்தாலும் விருந்தினர்களை நன்றாக உபசரித்து அவர்களுக்கு நிறைய பரிசுகள் தருவார்கள். இப்படி கையில் இருந்ததை எல்லாம் மற்றவர்களுக்குத் தந்துவிட்டு அவர்கள் ஏழையாகப் போய் மற்றவர்கள் சிரிக்கும்படி ஆகி, யாரும் கண் காணாத இடத்திற்கு துறவியாகப் போய் விடுவார்கள்.
இப்படி துறவிகள் இல்லறத்தானைப் பார்த்து ஏங்க , இல்லறத்தில் உள்ளவர்கள் துறவியாகப் போக எண்ண , அந்த ஊரில், போகத்தை விற்கும் பெண்கள் நிறைந்த தெருக்கள் பல இருந்தன.
பாடல்
துறவறத் தடைந்தோ ரில்லந்
துறந்தமைக் கிரங்க இல்லத்
துறவிருக் கின்ற மாந்தர்
உள்ளன வெல்லாம் ஈந்து
பிறர்நகை பொறாமல் அந்தப்
பெருந்துற வடையப் போகந்
திறமுற விற்கும் மின்னார்
செறிதருந் தெருக்கள் பல்ல.
சீர் பிரித்த பின்
துறவரத்து அடைந்தோர் இல்லம்
இல்லம் துறந்தமைக்கு இரங்க
இல்லத்து உறவிருக்கின்ற மாந்தர்
உள்ளன எல்லாம் ஈந்து
பிறர் நகை பொறாமல் அந்த
பெரும் துறவு அடைய
போகம் திறமுற விற்கும் மின்னார்
செறி தரும் தெருக்கள் பல்ல
அர்த்தம் புரியும் என்று நினைக்கிறேன்....
இப்படிப் பெண்கள் இருப்பதனால்தான், துறவிகள் வருந்தினரோ?!
ReplyDeleteஇப்படிப் பெண்களிடம் தம் செல்வத்தை தந்து விட்டு, இல்லறத்தார் பிறர் நகை தாளாமல் துறவறம் புகுந்தனரோ?!?