இராமாயணம் - பொருக்கென எழுந்து
இராமனுக்கு முடி சூட்டுவது என்று மந்திரிகள் சபையில் முடிவு செய்து ஆகி விட்டது. இராமனை அழைத்த்து வரும்படி சுமந்திரினிடம் தசரதன் சொல்லி அனுப்புகிறான்.
இங்கே கொஞ்சம் நிறுத்துவோம்.
அரச முறைப் படி, இராமன் தான் அரசு ஆள வேண்டும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தசரதன் சொன்னால் போதும். யாரும் அதை மறுத்து இருக்க மாட்டார்கள். இருந்தாலும், தசரதன் மந்திரிகள் சபையைக் கூட்டி ஆலோசிக்கிறான். அவர்கள் கருத்தைக் கேட்கிறான். கம்பனின் நிர்வாக இயல் என்று தனியாக எழுதலாம்.
சுமந்திரன் போய் இராமனை அழைக்கிறான் "அரசன் உங்களை அழைத்து வரும்படி சொன்னான் " என்று சொன்னவுடன் "பொருக்கென" வந்தானாம் இராமன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன், கொஞ்சம் ட்ரெஸ் பண்ணிக் கொண்டு வருகிறேன், என்று எல்லாம் சொல்லவில்லை. உடனே வந்தானாம்.
எவ்வளவு நல்ல பிள்ளை.
பெரியவர்கள் சொல்வதை அப்படியே கேட்பதில் இராமனுக்கு நிகர் இராமனே.
பாடல்
கண்டு, கைதொழுது, 'ஐய, இக் கடலிடைக் கிழவோன்,
"உண்டு ஒர் காரியம்; வருக!" என, உரைத்தனன்' எனலும்,
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து, ஓர்
கொண்டல்போல் அவன், கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டான்
பொருள்
கண்டு = இராமனைக் கண்டு
கைதொழுது = கை தொழுது
'ஐய, = அய்யனே
இக் கடலிடைக் = இந்த காதல் சூழ் உலகு. கடலுக்கு இடைப் பட்ட இடம்
கிழவோன் = தலைவன்
"உண்டு ஒர் காரியம்; வருக!" என, உரைத்தனன்' = ஒரு காரியம் உண்டு, நீ வரவேண்டும்
எனலும், = என்று சொன்ன உடன்
புண்டரீகக் கண் = தாமரை போன்ற கண்களைக் கொண்ட
புரவலன் = காப்பவன்
பொருக்கென எழுந்து = சட்டென்று எழுந்து
ஓர் கொண்டல்போல் = ஒரு மழை மேகம் போல. கொண்டல் என்றால் மழை மேகம். மேகம் எப்படி மிதந்து வருமோ அப்படி வந்தான். ஒரு சிக்கல் இல்லை, ஒரு உரசல் இல்லை, ஒரு தடங்கல் இல்லை, ஒரு உராய்வு இல்லை. அப்படியே மேகம் போல இலேசாக வந்தான்.
இன்னொன்று கவனிக்க வேண்டும். சுமந்திரனுக்குத் தெரியும் என்ன காரியம் என்று. ஆனால் அவன் அதை இராமனிடம் சொல்லவில்லை. இராமனும் "எதுக்கு அப்பா கூப்பிட்டார்" என்று கேட்கவில்லை.
அவன் = இராமன்
கொடி = கொடி அசையும்
நெடுந் = பெரிய
தேர்மிசைக் கொண்டான் = தேரில் ஏறினான்
கொண்டால் போல என்பது இனிமை. நமது பிள்ளைகளைக் கூப்பிட்டால், ஏன், எதுக்கு என்று நூறு கேள்விகள் வருகின்றன!
ReplyDelete