இராமாயணம் - விதியும் தருமமும்
பரதன் நாடாள்வான் , நீ காடாளாப் போ என்று கைகேயி சொன்ன பின், இராமன் அவள் மாளிகையை விட்டு வருகிறான். கோசலையை காண வருகிறான்.
தனியாக வருகிறான். முடி சூட்டி சக்ரவர்த்தியாக வர வேண்டிய இராமன், தனியாக யாரும் இல்லாமல் நடந்து வருகிறான். அதை தூரத்தில் இருந்து கைகேயி பார்க்கிறாள்.
முன்னால் வீசி விரும் கவரி இல்லை.
பின்னால் தாங்கி வரும் வெண்கொற்றக் குடை இல்லை.
பிள்ளை தனியாக வருகிறான். அவள் கண்ணுக்கு வேறு இரண்டு பேர் தெரிகிறார்கள்.
இராமனுக்கு முன்னே விதி செல்கிறது. அவன் பின்னே தர்மம் வருகிறது.
விதி என்ன என்று யாருக்கும் முதலில் தெரியாது...வாழ்க்கை செல்ல செல்லத் தான் விதியின் வெளிப்பாடு தெரியும். அடுத்த அடி எடுத்து வைத்த பின் தான் அது எங்கே வைக்கிறோம் என்று தெரிகிறது.
விதி இராமனை முன்னே பிடித்து இழுத்து செல்கிறது...இராமன் பிறந்தது , கானகம் சென்று இராவணணை கொல்ல. அந்த விதி அவனை முன்னே இருந்து இழுத்து செல்கிறது.
பின்னால் தர்மமோ , போகாதே இராமா, நீ போவது தர்மம் அல்ல என்று பின்னால் நின்று கெஞ்சி கேட்கிறது.
இந்த விதிக்கும், தர்மத்திற்கும் நடுவில், மகுடம் சூட்டி வருவான் என்று ஆவலோடு இருந்த கோசலை முன் இராமன் தனியாக வந்து நின்றான்.
பாடல்
குழைக்கின்ற கவரி இன்றி,
கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
ஒரு தமியன் சென்றான்.
பொருள்
குழைக்கின்ற கவரி இன்றி = வீசப் படும் கவரி இல்லாமல்
கொற்ற வெண்குடையும் இன்றி, = வெண் கொற்ற குடையும் இல்லாமல்
இழைக்கின்ற விதி முன் செல்ல = வரைக்கின்ற விதி முன்னால் செல்ல
தருமம் பின் இரங்கி ஏக, = தர்மம் பின்னால் இருந்து ஏங்க
‘மழைக்குன்றம் அனையான் = மழை மேகங்களால் சூழப் பட்ட மலையை போன்ற இராமன்
மௌலி = மணி முடி , கிரீடம்
கவித்தனன் வரும்’ என்று என்று = சூடி வரும் என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன் = மகிழ்வோடு இருந்த (கோசலை யின் முன்
ஒரு தமியன் சென்றான் = தனியாக சென்று நின்றான்
குழைக்கின்ற கவரி இன்றி,
கொற்ற வெண்குடையும் இன்றி,
இழைக்கின்ற விதி முன் செல்ல,
தருமம் பின் இரங்கி ஏக,
‘மழைக்குன்றம் அனையான் மௌலி
கவித்தனன் வரும்’ என்று என்று
தழைக்கின்ற உள்ளத்து அன்னாள்முன்,
ஒரு தமியன் சென்றான்.
என்ன ஒரு உள்ளத்தை உருக்கும் பாடல்!
ReplyDeleteஒரு விதத்தில் பார்த்தால், இராமன் கானகம் சென்று இராவணனைக் கொள்வது அவனது பிறவிக்கே தர்மம்தானே? இருந்தாலும், இராமனுக்கு நடக்கும் அநீதியைப் பார்த்தால் தர்மமே இரங்குகிறது!!
'இழைக்கின்ற விதி' என்று நிகழ்காலத்தில் வருவது எவ்வாறு? ' இழைக்கப்பட்ட கருமத்தால் வந்த விதி' என்று கடந்தகாலத்தில் ஏற்பட்ட விதியாகத்தானே இருக்க வேண்டும்? இதில் ஏதாவது ரகஸ்யார்த்தம் உள்ளதோ?
ReplyDelete