தேவாரம் - சொல்லும் நா நமச்சிவாயவே
பழக்க வழக்கம் என்றொரு சொற்றொடர் உண்டு. பழக்க வழக்கம் என்றால் என்ன ?
ஒன்றை பழக்கப் படுத்தி விட்டால் அது வழக்கமாகி விடும்.
நல்ல விஷயங்களைப் நம் உடலுக்கு பழகப் படுத்தி விட்டால் பின் எப்போதும் அதை மறக்காது.
இறுதிக் காலத்தில் அறிவு குழம்பும், நினைவு தப்பும், புலன்கள் தடுமாறும்...எப்போதும் நல்லதையே செய்து பழக்கப் படுத்திவிட்டால் புலன்கள் அப்போதும் நல்லதையே செய்யும் ...
சுந்தரர் சொல்கிறார், "என் மனம் மறக்கினும், என் நினைவு உன்னை மறக்கினும் ..என் நாக்கு நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே இருக்கும்".
சொல்லும் நா நமச்சிவாயவே
பாடல்
மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்
பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற
வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்
சொல்லும் நாநமச்சி வாயவே.
சீர் பிரித்த பின்
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.
பொருள்
மற்றுப் = மற்ற
பற்று = பற்றுதல்கள்
எனக்கு இன்றி = எனக்கு இல்லாமல்
நின் திரு பாதமே = உன் திருவடிகளையே
மனம் பாவித்தேன் = மனதில் நினைத்தேன்
பெற்றலும் பிறந்தேன் = பெற்றதால் பிறந்தேன்
இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன் = இனி பிறவாத தன்மை
அடைந்தேன்
கற்றவர் = கற்றவர்கள்
தொழுது = வணங்கி
ஏத்தும் = போற்றும்
சீர்க் கறையூரிற் = கறையூரில்
பாண்டிக் கொடுமுடி = பாண்டிக் கொடு முடி என்ற ஊரில்
நற்றவா = நல்ல தவத்தின் பலனே
உன்னை நான் மறக்கினும் = உன்னை நான் மறந்தாலும்
சொல்லும் நா நமச்சிவாயவே = என் நாக்கு சொல்லும் நமச்சிவாயா என்று
"நமச்சிவாயவே" என்று சுந்தரரின் நாக்கு சொல்லும்.
நம் நாக்கு என்ன சொல்லுமோ , யாருக்குத் தெரியும் ....
"உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்பது அருமை.
ReplyDeleteநம் வாயெல்லாம் ஹம்சிகா பேர் சொல்லும்!
இவ்வளவு அருமையான பொக்கிஷங்களை வைத்துக்கொண்டு பூமிக்கடியில் பொக்கிஷத்துக்காக தோண்டிக்கொண்டிருக்கிரோமே. என்னத்தை சொல்ல?!
ReplyDeleteஓம் நமசிவாய
ReplyDeleteநற்றுணையாவது நமச்சிவாயவே...
ReplyDelete