Pages

Saturday, October 12, 2013

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து

பிரபந்தம் - புறம் சுவர் கோலம் செய்து 


வீடு உள்ளே எப்படியோ அலங்கோலமாக இருக்கிறது. வெளியே மட்டும் அழகாக வெள்ளை அடித்து சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். 

மன அழுக்கு ஆயிரம் இருக்கு. ஆனால் வெளியே மத சின்னங்கள் ஆயிரம். நெற்றியில், கழுத்தில், கையில், தலையில், தோளில் என்று வித விதமான சின்னங்கள். 

சின்னங்கள் ஒவ்வொவுன்றும் ஒரு சுவர்கள். இந்தியன் என்று சுவர், இந்து என்று ஒரு சுவர், சைவன்/வைணவன் என்று ஒரு சுவர், அதற்க்குள் இன்னும் எத்தனையோ சுவர்கள். இத்தனை சுவர்களையும் தாண்டி அதற்கு பின்னால் நாம் இருக்கிறோம். இப்படி ஒவ்வொருவரை சுற்றியும் பலப் பல சுவர்கள். நம் கவனம் எல்லாம் சுவர்களை அழகு படுத்துவதில்தான். 

என்ன தான் இந்த உடம்பை பல வித மதச் சின்னங்கள் இட்டு அழகு படுத்தினாலும், இது ஓட்டைச் சுவர். ஒரு நாள் விழும். புரண்டு புரண்டு விழும். உயிர் போகும் நாள் ஒன்று வரும். இந்த புற சுவர்கள் நம்மை  எமனிடம் இருந்து காக்க முடியாது என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார் 

பாடல் 

மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.

பொருள்

மறம்சுவர் = அறம் இல்லாதது மறம். மறம் என்ற சுவர் 
மதிளெ டுத்து = மதில் எடுத்து 
மறுமைக்கே வெறுமை பூண்டு = மறுமை என்றால் இந்த வாழ்க்கை முடிந்த பின் நிகழ்வது. அதற்காக ஒன்றும் செய்யாமல் 
புறம்சுவ ரோட்டை மாடம் = புறம் சுவர் ஓட்டை மாடம் . இந்த ஓட்டை நிறைந்த மாடங்களை கொண்ட உடல் 
புரளும்போ தறிய மாட்டீர் = புரண்டு விழும்போது அறிய மாட்டீர்கள். என்ன நடக்கிறது என்று தெரியாது . அறிவு மங்கும். புலன்கள் சோர்ந்து விழும். 
அறம்சுவ ராகி = அறமே சுவராகி 
நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே = நின்ற திருவரங்கத்து திருமாலுக்கு ஆட் படாமல் 
புறம்சுவர் கோலஞ் செய்து = வெளி சுவரை அழகு செய்து 
புள் = பறவைகள் 
கவ்வக் கிடக்கின் றீரே. = நீங்கள் இறந்த பின் உங்கள் உடலை கவ்விக் கொண்டு போகும்படி இருக்கின்றீர்களே  

சமய சின்னங்களால் ஒரு பலனும் இல்லை என்கிறார். 

யோசிப்போம் 


1 comment:

  1. "மறம்சுவர் மதிளெ டுத்து" என்றால், மறத்தை மதிள் போலக் கட்டி வைத்து என்பது பொருளாகலாம். நாமெல்லோரும், நமது சக்தி, பாதுகாப்பு என்று எண்ணி, மறத்தை கட்டி வைக்கிறோம். அதைவிட, அரங்கனாருக்கு ஆளாகுக என்கிறார்.

    இவ்வளவு சொன்னவர் கூட, "அரங்கனாருக்கு" ஆளாகச் சொல்கிறார். ஏன் "சிவனுக்கு", "அல்லாவுக்கு", "ஏசுவுக்கு" ஆளாகாக் கூடாது?!?!?

    ReplyDelete