Pages

Tuesday, November 12, 2013

இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?

இராமாயணம் - நீ இரங்கல் வேண்டுமோ ?


‘கண் முதல் காட்சிய, கரை இல் நீளத்த,
உள் முதல் பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன,
மண் முதல் பூதங்கள் மாயும் என்றபோது,
எண்முதல் உயிர்க்கு நீ இரங்கள் வேண்டுமோ?

கண் முதலிய புலன்கள் காணும் கண்டு உணரும் எண்ணற்ற பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் என்ற போது, இந்த உயிர்கள் இறந்ததற்கு நீ வருத்தப் படலாமா?

என்று தசரதன் இறந்த செய்தி கேட்டு வருந்தும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.

கண் முதல் காட்சிய = கண்கள் முதலிய புலன்கள் கண்டு உணரும் 

கரை இல் நீளத்த = எல்லை அற்ற எண்ணிக்கை கொண்ட பொருள்களின்

உள் முதல் = மூலமான

பொருட்டு எலாம் ஊற்றம் ஆவன = அவைகள் எல்லாவற்றுக்கும் ஊற்று போல ஆதாரனமான

மண் முதல் பூதங்கள் = மண், தீ, நீர், வானம் போன்ற பூதங்கள்

மாயும் என்றபோது = அழியும் என்ற போது

எண் முதல் உயிர்க்கு = இவற்றை விட எளிய உயிர்களுக்கு

நீ இரங்கல்  வேண்டுமோ? = நீ வருத்தப் பட வேண்டுமா ? வேண்டாம்.


இந்த உலகில் தோன்றிய எல்லாம் அழியும். பொருள்கள் மட்டும் அல்ல, அந்த பொருகளின் மூலமான பஞ்ச பூதங்களும் அழியும் தன்மை கொண்டது. அப்படி இருக்கும் போது , இந்த உடல் அழிவதைப் பற்றி நீ வருத்தப் படலாமா


நாம் தங்கம் பார்த்து இருக்கிறோம். தங்கத்தில் இருந்து மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்கள் உருவாவதைப் பாத்து இருக்கிறோம்.  ஒரு வளையலை அழித்து  இன்னொரு வளையல் செய்கிறோம். அழிவது வளையல்தான். தங்கம் அல்ல. தங்கம் அப்படியே இருக்கிறது. 

கம்பர் சொல்கிறார் ...வளையல் மட்டும் அல்ல, தங்கமும் அழியும். 

மோதிரம் அழியும். 

அது உருவாக காரணமாக இருந்த தங்கமும் அழியும்.

அப்படி என்றால், அதை அணிந்தவன் அழியாமல் எப்போதும் இருப்பான் என்று நினைக்க முடியுமா  ?


No comments:

Post a Comment