Pages

Wednesday, November 20, 2013

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம்

வில்லிபாரதம் - ஐந்தாவது வேதம் 


இதிகாசங்கள், வேதம் முதலிய மறை நூல்களில் உள்ளவற்றை விரித்து கூற வந்த நூல்கள்.

 சிறிதாக,கண்ணுக்குப் தெரியாதவற்றை பார்க்க உதவும் பூதக் கண்ணாடி (lens ) போல வேதங்களில் உள்ளவற்றை நாம் புரிந்து கொள்ள கதை வடிவில் எடுத்துத் தருவது புராணங்களும் இதிகாசங்களும்.

சத்யமேவ ஜெயதே என்ற ஒரு வரியை விரித்துச் சொன்னது அரிச்சந்திர புராணம். 

எல்லோரும் சகோதரர்களை போல ஒன்றாக அன்போடு வாழ  வேண்டும் என்று கூற வந்தது இராமாயணமும் மகாபாரதமும்.

இராமாயணம் அன்பின் பெருமையை நேரடியாக சொன்னது.

பாரதம் அன்பின்மையால் வரும் தீமைகளை எடுத்துச் சொன்னது. எனவே பாரதத்தை எதிர் மறை காப்பியம் என்று சொல்வாரும் உண்டு.

மகா பாரதத்தை ஐந்தாவது வேதம் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு வாழ்க்கைக்கு வேண்டிய உணமைகளை, கடமைகளை சொல்லித் தருவது பாரதம்.

பாரதத்தில் உள்ள பாடல்கள் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும்.

பலா பழம் சற்று கடினமானதுதான். அதற்காக அதன் சுவையான சுளைகளை விட்டு விட முடியுமா ?

முள் இருக்கும். கை எல்லாம் பிசு பிசு என்று ஒட்டும். ஆனால் பலா சுளை கிடைத்து விட்டால்  மத்தது எல்லாம் மறந்து விடும்.

சுளைகளை எடுத்து தருகிறேன். சுவைத்துப் பாருங்கள்.....:)

மகா பாரதத்தை பிள்ளையாரே மேரு மலையில் தன்னுடைய தந்தத்தை வைத்து எழுதினார் என்று ஒரு கதை உண்டு.

என்ன அர்த்தம் ?

கல்லின் மேல் எழுத்துக்கு நேர் என்று அவ்வை சொன்னது போல் என்று வரை இமய மலை இருக்குமோ அன்று வரை பாரதக் கதையும் இருக்கும்.

எழுதியது ஞானக் கடவுளான பிள்ளையார் என்று கூறுவது அது ஒரு மிக உயர்ந்த ஞான நூல் என்று அறிவுறுத்துவதர்க்காக.

வில்லி பாரதத்தின் சிறப்பு பாயிரம்....

நீடாழி யுலகத்து மறைநாலொ டைந்தென்று நிலைநிற்கவே
வாடாத தவவாய்மை முனிராசன் மாபார தஞ்சொன்னநாள்
ஏடாக வடமேரு வெற்பாக வங்கூரெ  ழுத்தாணிதன்
கோடாக வெழுதும்பி ரானைப் பணிந்தன்பு கூர்வாமரோ.

என்ன முள் குத்துகிறதா ? 

சீர் பிரிக்கலாம்  

நீடாழி உலகத்து  மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே 
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.


பொருள்


நீடாழி = ஆழி என்றால் கடல். ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள. நீடாழி , நீண்ட கடலால் சூழப் பட்ட 

உலகத்து = உலகில்

மறை = வேதங்கள்

நாலோடு = நான்கோடு

ஐந்து = ஐந்தாவது வேதம்

என்று = என்று

நிலை நிற்கவே  = நிலைத்து நிற்கவே

வாடாத = தளராத

தவ = தவத்தையும்

வாய்மை = வாய்மையும்

முனி ராசன் = வியாசன்

மாபாரதம் = மா பாரதம்

சொன்ன நாள் = சொன்னபோது


ஏடாக = அதை எழுதும் ஏடாக

வட மேரு வெற்பாக = வடக்கில் உள்ள மேரு மலையும்

வங் = வன்மையான

கூர் எழுத்தாணி = கூர்மையான எழுத்தாணி 

தன் = தன்னுடைய

கோடாக = தந்தத்தை

எழுதும் = கொண்டு எழுதும்

பிரானைப் = பிரான் என்றால் பிரியாதவன். பக்தர்களை விட்டு என்றும் பிரியாதவன்

பணிந்து = பணிந்து

அன்பு கூர்வாம் = அன்பு செலுத்துவோம். பயம் இல்லை, பக்தி இல்லை ...இறைவன் மேல் அன்பு செலுத்துவோம்

அரோ = அசைச் சொல் 

No comments:

Post a Comment