Pages

Sunday, November 24, 2013

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன்

வில்லிபாரதம் - உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் 



பாண்டவர்கள் சார்பாக கண்ணன் தூது வந்து, விதுரன் அரண்மனையில் தங்கி இருக்கிறான்.

மறு நாள் துரியோதனனை அரசவையில்  காணவேண்டும்.

அவன் வருவதற்கு முன்னால் துரியோதனன் ஆலோசனை செய்கிறான்.

அவனுக்கு சகுனி துர்போதனை செய்கிறான்.

"நாளை கண்ணன் வந்தால் அவனுக்கு மரியாதை செய்யாதே...." என்று அவனை தூண்டி விடுகிறான்.

துரியோதனன் மனதில் சினம் ஏறுகிறது.

தன்  சபையில் உள்ள மன்னர்களை எல்லாம் பார்த்து கூறுகிறான்....

"நாளைக்கு அந்த இடை சாதியில் பிறந்த கண்ணன் இந்த சபைக்கு வரும் போது , யாராவது எழுந்து அவனை வணங்கி அவனுக்கு மரியாதை செய்தால் உங்கள் ஊரை தீ வைத்து கொளுத்தி விடுவேன் "

என்று மிரட்டுகிறான்.

பாடல்

காவன்மன்னவர்முகங்கடோறுமிருகண்பரப்பியமர்கருதுவோ
ரேவலின்கண்வருதூதனாமிடையனின்றுநம்மவையிலெய்தினால்
ஓவலின்றியெதிர் சென்று கண்டுதொழுதுறவுகூரிலினியுங்களூர்
தீவலஞ்செயவடர்ப்பனென்று நனிசீறினான் முறைமைமாறினான்.


படிக்கவே கடினமாக இருக்கிறதா ? கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

காவல் மன்னவர் முகங்கள் தோறும் இரு கண் பரப்பி அமர் கருதுவோர் 
ஏவலின் கண் வரும் தூதனாம் இடையன் இன்று நம் அவையில் ஏய்தினால் 
ஓவலின்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்களூர் 
தீ வலம் செய்ய அடர்பேன் என்று நனி சீறினான் முறைமை மாறினான் 

அப்பாட...ஒரு வழியா சீர் பிரிச்சாச்சு...இனிமேல் அர்த்தம் புரிவது எளிது...

காவல் மன்னவர் = நாட்டையும், மக்களையும் காவல் செய்யும் மன்னவர்கள்

முகங்கள் தோறும் = ஒவ்வொருவர் முகத்தையும் தனித் தனியாக நோக்கி

இரு கண் பரப்பி = தன் இரண்டு கண்களாலும் உற்று நோக்கி

அமர் கருதுவோர்  = சண்டை விரும்பும்  (பாண்டவர்களின்)

ஏவலின் கண் வரும் = ஏவலில் வரும்

தூதனாம் = தூதனாம்

இடையன் = இடை சாதியில் தோன்றிய கண்ணன்

இன்று நம் அவையில் ஏய்தினால் = இன்று நம் அவைக்கு வந்தால்

ஓவலின்றி = ஒழிதல் இன்றி

எதிர் சென்று கண்டு = எதிரில் சென்று

தொழுது = வணங்கி

உறவு கூறில் = உறவு கூறி, நலம் விசாரித்தால்

இனி = இனி

உங்களூர் = உங்கள் ஊரை

தீ வலம் செய்ய அடர்பேன் = தீ வைத்து கொளுத்தி விடுவேன்

என்று  = என்று

நனி = மிகவும்

சீறினான் = கோபப் பட்டான்

முறைமை மாறினான்  = வழி தவறியவன்


1 comment:

  1. இந்தப் பாடலைப் படித்ததும், ஏதோ கண் முன்பு நடப்பது போல உணர்ந்தேன்.

    ReplyDelete