இராமாயணம் - யமனின் கருணை
‘ “உண்மை இல் பிறவிகள்,
உலப்பு இல் கோடிகள்,
தண்மையில் வெம்மையில்
தழுவின” எனும்
வண்மையை நோக்கிய,
அரிய கூற்றின்பால்,
கண்மையும் உளது எனக்
கருதல் ஆகுமோ?
உண்மை இல்லாத பிறவிகள் கோடிக் கணக்கில் உண்டு. அவை ஒன்றை ஒன்று தழுவி நின்றன. இந்த கூற்றுவன் இருக்கிறானே அவனிடம் கருணையை எதிர்பார்க்கலாமா
என்று தசதரன் இறந்த துக்கத்தில் இருக்கும் இராமனுக்கு வசிட்டன் ஆறுதல் கூறுகிறான்.
உண்மை இல் பிறவிகள் = உண்மை இல்லாத பிறவிகள். இந்த பிறவிகள் இன்று இருக்கும் நாளை இருக்காது. மின்னேர் வாழ்க்கை என்று சொல்லும் பிரபந்தம். நீர் கோல வாழ்வை என்பார் கம்பர் பிறிதோர் இடத்தில். இந்த பிறவிகளை உண்மையானவை என்று கொள்ள முடியாது. உண்மை சாஸ்வதமானது.பொய் இன்றிருக்கும் நாளை இருக்காது.
உலப்பு இல் கோடிகள் = உலப்பு என்றால் முடிவு, இறுதி.கணக்கில் அடங்கா கோடி கோடி இந்த உண்மை இல்லாத பிறவிகள்.
உலபில்லா ஆனந்த மாய தேனினை சொரிந்து
புறம் புறம் எனத் திரிந்த செல்வனே சிவனே
யான் உனை தொடர்ந்து சிக்கென பிடித்தேன்
என்பார் மணி வாசகர்.
தண்மையில் வெம்மையில் தழுவின = தண்மை என்றால் குளிர்ச்சி. வெம்மை என்றால் சூடு. இந்த உயிரனங்கள் ஒன்றை ஒன்று அன்போடும் , போட்டி போட்டு ஒன்றை ஒன்று சண்டை இட்டும் சார்ந்து நிற்கின்றன
எனும் = என்னும்
வண்மையை நோக்கிய = வல்லமை கொண்ட
அரிய = சிறந்த
கூற்றின்பால் = யமனிடம். கூற்றுவன் என்பவன் உயிரையும் உடலையும் கூறு படுத்துபவன்
கண்மையும் = கண்மை என்றால் ஏதோ கண்ணுக்கு போடும் மை அல்ல. கண்மை என்றால் கருணை.
உளது எனக் கருதல் ஆகுமோ? = யமனிடம் கருணை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா ? முடியாது
யமன் கருணை இல்லாதவன்...நாள் கிழமை பார்க்க மாட்டான், அன்பின் ஆழம் அறிய மாட்டான், பிரிவின் துயரம் அறியான், கண்ணீரின் சோகம் அறியாதவன் ....அவனிடம் கருணையை எதிர் பார்க்க முடியாது ....
No comments:
Post a Comment