Pages

Wednesday, December 11, 2013

வில்லி பாரதம் - செய் புண்ணியம்

வில்லி பாரதம் - செய் புண்ணியம் 


போரில் அர்ஜுனனின் அம்பால் தாக்கப்பட்டு அயர்ந்து கிடக்கிறான் கர்ணன். அப்போது வேதியர் உருவில் வந்த கண்ணன் , "நீ செய்த புண்ணியம் அனைத்தையும் எனக்கு தானமாகத் தா " என்று கேட்டான்.

கர்ணனும் மகிழ்ந்து கொடுக்கிறான்.

"வேதியரே, என் உயிர் தன் நிலையில் இருந்து கலங்கி நிற்கிறது. அது என் உடலின் உள்ளே இருகிறதா , வெளியே இருகிறதா என்று தெரியவில்லை. நான் வேண்டுவோருக்கு வேண்டிய பொருளை கொடுக்கும் காலத்தில் நீர் வரவில்லை. நான் இது வரை செய்த புண்ணியங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் உமக்குத் தானமாகத் தருகிறேன். நீ அந்த பிரமனை போன்ற உயர்ந்தவன்..உமக்கு இதை தருவதை விட வேறு புண்ணியம் எதுவும் இல்லை "

பாடல்

ஆவியோநிலையிற்கலங்கியதியாக்கையகத்ததோபுறத்துதோ
                                      வறியேன்,
பாவியேன்வேண்டும்பொருளெலாயக்கும்பக்குவந்தன்னில்வந்
                                    திலையால்.
ஓவிலாதியான்செய்புண்ணியமனைத்துமுதவினேன்கொள்க
                                    நீயுனக்குப்.
பூவில்வாழயனுநிகரலனென்றாற்புண்ணியமிதனினும்
                                     பெரிதோ.


சீர் பிரித்த பின்


ஆவியோ நிலையில் கலங்கியது அது ஆக்கையின் அகத்தோ புறத்ததோ அறியேன் 

பாவியேன் வேண்டும் பொருள் எல்லாம் பயக்கும் பக்குவம் தன்னில் வந்தில்லையால் 

ஒவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும் உதவினேன் கொள்க நீ உனக்கு 

பூவில் வாழும் அயனும் நிகரில்லை என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ  


பொருள்

ஆவியோ = என் உயிரோ

நிலையில் கலங்கியது = தான் இருக்கும் நிலையில் கலங்கியது

அது = அது, அந்த உயிர்

ஆக்கையின் = உடலின்

அகத்தோ = உள்ளேயோ

புறத்ததோ =வெளியேயோ

அறியேன் = அறியேன்.

வாலி இருந்து கிடக்கிறான். தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

மத்துறு தயிர் என வந்து சென்று இடை 
தத்துறும் உயிரென புலன்கள் தள்ளுரும் 
பித்து நின் பிரிவில் பிறந்த வேதனை  
எத்தனை உள அவை இன்னும் ஈட்டவோ 

மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் வந்து வந்து செல்வது போல உயிர் என் உடலுக்குள் வந்து வந்து வெளியே போகிறது என்றாள் .



பாவியேன் = பாவியாகிய  நான்

வேண்டும் பொருள் = யார் என்ன பொருள் வேண்டினாலும்

எல்லாம் பயக்கும் = அவற்றை தரும்

பக்குவம் = நிலையில் இருந்த

 தன்னில் வந்தில்லையால் = அந்த நாட்களில் நீ வர வில்லை. 

ஒவிலாது = முடிவில்லாது, கொஞ்சம் கூட மிச்சமில்லாமல்

யான் = நான்

செய் புண்ணியம் = செய் புண்ணியம். செய் புண்ணியம் என்பது வினைத் தொகை. செய்த புண்ணியம், செய்கின்ற புண்ணியம், செய்யப் போகும் புண்ணியம். கர்ணனை சாக விடாமல் அவன் செய்த புண்ணியங்கள் அவனை காத்து வந்தன. தர்மம்  தலை காக்கும் என்பார் போல. அப்படி அவன் செய்த புண்ணியங்களை எல்லாம் தானமாகத் தந்து விட்டால், அப்படி தானம் தந்ததும் ஒரு புண்ணியம்  தானே,அது ஏன் அவனை காக்கவில்லை என்று ஒரு கேள்வி எழும் அல்லவா.  வில்லிபுத்துரார் தமிழ் விளையாடுகிறது . செய் புண்ணியம் என்ற ஒரு   வார்த்தையை போடுகிறார். 

அனைத்தும் உதவினேன் = எல்லாவற்றையும் தந்து விட்டேன். தனக்கென்று கொஞ்சம் எடுத்து வைத்துக் கொண்டு மீதியை தரவில்லை. எல்லாவற்றையும் கொடுத்து விட்டான்.

கொள்க நீ = நீ ஏற்றுக் கொள்

உனக்கு பூவில் வாழும் அயனும் நிகரில்லை  = பூவில் வாழும் அந்த பிரமனும் உனக்கு நிகர் இல்லை.

என்றால் புண்ணியம் இதனினும் பெரிதோ  = உனக்கு தானம் தருவதை விட பெரிய புண்ணியம் இல்லை.


தன்னிடம், தான் செய்த அனைத்து புண்ணியங்களையும் தானமாகப் பெற்ற வேதியன் மேல் அவனுக்கு  கோபம் இல்லை. வேதியனை அவன் தாழ்வாக  நினைக்க வில்லை.

"நீ பிரமனை விட உயர்ந்தவன் " என்று அவனை புகழ்கிறான்.

பிறர்க்கு உதவும் அந்த குணம்...அதில் ஒரு சிறு துளியாவது நமக்குள் வரட்டும்.




3 comments:

  1. "செய் புண்ணியம்" - அருமை! இந்தச் செய்யுளைப் படிக்கும் போதே எனக்கு அந்தக் கேள்வி வந்தது. ஆனால், வில்லி புத்தூரார் அதற்கு விடை அளிக்கும் வண்ணம் முன்னமே எழுதி விட்டார்!

    ReplyDelete
    Replies
    1. .ஆம் மிக சிறந்த ஆழமான பொருள் கொண்ட சொல்

      Delete
  2. கண்ணனை மட்டும் கர்ணண் அழ வைக்கவில்லலை .

    ReplyDelete