Pages

Sunday, December 29, 2013

குறுந்தொகை - நல் அறிவு இழந்த காமம்

குறுந்தொகை - நல் அறிவு இழந்த காமம் 


அவளுக்கு, அவன் மேல் அளவற்ற காதல். அவனோ மேல் ஜாதிப் பையன். இவளோ சேரியில் வாழ்பவள். காதலுக்கு கண்ணா இருக்கு இதை எல்லாம் அறிந்து கொள்ள ? காதல் வந்து  விட்டது.

பாறையின் இடுக்கில் முளை விடும் செடி போல் அவள் மனதில் காதல்.

தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்....

"அவன் இந்த சேரி பக்கம் எல்லாம் வர மாட்டான், அப்படியே வந்தாலும் என்னை கட்டி அணைக்க மாட்டான். மற்றவர்களின் சுடு காட்டைப் எப்படி வெறுப்போடு பார்ப்போமோ அப்படி என்னை பார்ப்பான். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு எப்படி வேறு எதையும் சட்டை பண்ணாமல் நேரே போகுமோ அது போல என் காமம் எதையும் காணாமல் அவன் பால் செல்கிறது " என்று சொல்லி கண் கலங்குகிறாள்.....

பாடல்

ஓரூர் வாழினுஞ் சேரி வாரார் 
சேரி வரினு மார முயங்கார் 
ஏதி லாளர் சுடலை போலக் 
காணாக் கழிப மன்னே நாணட்டு 
நல்லறி விழந்த காமம் 
வில்லுமிழ் கணையிற் சென்றுசேட் படவே. 

பொருள் 

ஓரூர் வாழினுஞ் = ஒரே ஊரில் வாழ்ந்தாலும் 

சேரி வாரார்  = நாம் வாழும் இந்த சேரிக்கு வாரார்

சேரி வரினும் = சேரிக்கு வந்தாலும் 

மார முயங்கார் = என்னை மார்போடு கட்டி அணைக்க மாட்டான்

ஏதி லாளர் = மற்றவர்களின்

சுடலை போலக் = சுடு காட்டைப் போல
 
காணாக் கழிப = காணமல் போய் விடுவான்

மன்னே

நாணட்டு = நாண் + அற்று = நாணம் அற்று

நல்லறி விழந்த காமம் = நல்ல அறிவை இழந்த காமம்

வில்லுமிழ் = வில்லு உமிழும் , வில்லில் இருந்து வெளிப்பட்ட

கணையிற் சென்று = கணை (அம்பு) போல சென்று

சேட் படவே. = தூரத்தில் செல்லுமே அது போல

சுடுகாட்டை யார் விரும்புவார்கள். கண்டாலும் முகத்தை திருப்பிக் கொண்டு போய் விடுவார்கள். சற்று வேகமாக போய் விடுவார்கள். அதிலும் மற்ற ஜாதி காரர்களின்  சுடு காடு என்றால் எவ்வளவு வெறுப்பு இருக்கும் ? அப்படி என் மேல்  வெறுப்பு கொள்கிறான் என்று கலங்குகிறாள்.

அவள் சோகத்தின், கண்ணீரின் ஈரம் காலம் கடந்து வந்தும் நம் நெஞ்சை தொடுகிறது அல்லவா ?




2 comments:

  1. என்ன ஒரு உணர்ச்சி நிரம்பிய பாடல்! அருமை.

    "பாறையின் இடுக்கில் முளை விடும் செடி போல் அவள் மனதில் காதல்" - உன் விளக்கத்தில் இந்த வரி மிக இனிமை. குறுந்தொகைப் பாடலின் சாறைப் பிழிந்ததுபோல் இருக்கிறது.

    ReplyDelete
  2. you have mentioned that this is a love between an upper caste man and a lower caste woman. uraila it says that her husband has come back from a concubine, she is not accepting him; so he has sent a messenger; this poem is the narration of the thalaivi to the messenger. The key word is cheri. Cheri, we know as slum area. But in the urai, it has been referred as street. Because of a single word, full meaning of the poem is changing drastically.

    ReplyDelete