Pages

Wednesday, December 25, 2013

குறுந்தொகை - இந்த மனசு போய் என்ன செய்யப் போகிறது ?

குறுந்தொகை - இந்த மனசு போய் என்ன செய்யப் போகிறது ?


நான் இங்கே இருக்கேன்...என்னோட மனசு இருக்கே அது இப்படி ஊருக்கு முந்தி அவளைப் போய் பார்த்து என்ன செய்யப் போகுது...நான் என் கையால அவளை கட்டி பிடிக்கிற மாதிரி வருமா இந்த மனம் கட்டிப் பிடிப்பது ?

இன்னும் எவ்வளவு தூரம் போகணும் அவளை பார்க்க, ஆனா இந்த மனம் எங்கே கேக்குது...அது பாட்டுக்கு ஓடிப் போயிருச்சு அவளை பார்க்க....



அஞ்சுவ தறியா தமர்துணைதழீஇய 
நெஞ்சுநப் பிரிந்தன் றாயினு மெஞ்சிய 
கைபிணி நெகிழினஃ தெவனோ நன்றும் 
சேய வம்ம விருமா மிடையே 
மாக்கடற் றிரையின் முழங்கி வலனேர்பு  
கோட்புலி வழங்குஞ் சோலை 
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.

பொருள்

அஞ்சுவது அறியாது = அஞ்சுவதை அறியாமல்

தமர் = தமர் என்றால் துணை, உறவு. இங்கு தலைவி

துணை = துணை

தழீஇய  = தழுவும் பொருட்டு

நெஞ்சு = என் மனம்

நம் பிரிந்தன்று = நம்மை விட்டு பிரிந்து சென்றது

ஆயினும் = ஆனாலும்

எஞ்சிய = மீதம் உள்ள (வெறும் மனம் மட்டும் போனால், மீதியுள்ள உடல்)


கை = கை

பிணி = பிணித்தல், தழுவதல்

நெகிழின் = நெகிழ்ந்தால்

அ ஃது எவன் = அதனால் என்ன பயன் ?

நன்றும் = நல்ல, இந்த இடத்தில் நிறைய

சேய = தூரம் உள்ள

இருவாம் இடையே  = எங்கள் இருவருக்கும் உள்ள இடை வெளி

மாக் கடல் = பெரிய கடல்

திரையின் = அலைகளின்
முழங்கி  = முழக்கம் போன்ற ஒலி

வலனேர்பு = வலமாக எழுந்து
 
கோட்புலி = கொடுமையான புலி

வழங்குஞ் சோலை = இருக்கும் கானகம்

எனைத்து = எத்தனை

என்று = என்று

எண்ணுகோ  = எண்ணுவேன் ?

முயக்கிடை = அவளை கட்டி அணைப்பதற்கு

மலைவே = மலைபோல் தடையாக உள்ள

கொஞ்சம் கரடு முரடான பாடல் அமைப்பு தான். வார்த்தைகளை கொஞ்சம் இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம்  விளங்கும்.


தலைவன் வேலை முடித்து விட்டு ஊர் திரும்புகிறான். சண்டைக்கு போய் விட்டோ, அல்லது பொருள் சேர்த்துவிட்டோ ரொம்ப நாள் கழித்து வருகிறான்.

தேரில் மிக விரைவாக மனைவியைத் தேடி வருகிறான்.

வருகின்ற வழி எல்லாம் பெரிய காடுகள்.

அந்த காட்டில் புலி உறுமுகின்றது. அது கடல் அலை போல சத்தம் போடுகிறது.

ஆபத்தான வழிதான்.

அவன் நினைத்துப் பார்க்கிறான்... அவள் எப்படி இருப்பாள் ? என்ன உடை உடுத்தி இருப்பாள் ? என்ன நகை போட்டு இருப்பாள் என்று அவன் அவன் கற்பனை விரிகிறது...அவளைப் பார்க்க அவன் மனம் அவனுக்கு முன்னே ஓடிவிட்டது.

கற்பனையில் அவளைக் கண்டு மகிழ்கிறான்...


அவனுக்கு புன் முறுவல் வருகிறது....

இந்த மனம் போய் என்ன செய்யப் போகிறது...இந்த மனதால் அவளை கட்டி பிடிக்க முடியுமா  ? அப்படியே கட்டி பிடித்தாலும் நான் என் கையால் அவளை அணைப்பது போல  வருமா என்று புன்முறுவல் பூக்கிறான்....


இரசனையான பாடல் ...

தலைவன் தலைவிக்கு இடையே உள்ள அன்பை வெளிப் படுத்தும் ஒரு இனிய பாடல்.

இப்படி பல பாடல்களைக் கொண்டது குறுந்தொகை....நேரமிருப்பின் மூல நூலைப் படித்துப் பாருங்கள்.




3 comments:

  1. இந்த பாடல் எல்லாம் விளக்கம் இல்லாமல் புரிந்து கொள்ளவே முடியாது. அவ்வளவு கடினமான பாடலுக்கு எளிமையான விளக்கம். இது மாதிரி ஒரு ஆள் இருந்தால் போதும் தமிழ் என்றைக்கும் வாழும். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. சமீபத்தில் தற்செயலாக தங்கள் பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. ப்ரமாதம். தமிழின் அத்தனை சுவைகளையும் இலக்கிய நயங்களையும், முக்கியமாக அருஞ்சொற்பொருட்கள் மட்டுமல்லாது அனைத்து சொற்களுக்கும் பொருள் எழுதி பாடலை விளக்கியிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க தங்கள் தமிழ்ப்பணி. நன்றிகள் கோடி./ சந்தர் (connectchander@gmail.com)
    பி.கு. தங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா?

    ReplyDelete
  3. இந்த மாதிரி பாடல்களை இந்த ப்ளாக் மூலம் இல்லாமல், நாங்கள் எங்கே தேடித் படிக்கப் போகிறோம்? இவைகளைப் படிக்க வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete