நன்னெறி - சொல்லும், சொல்பவரும்
பிள்ளைகளுக்கு பெற்றோரும் பெரியவர்களும் சொல்லும் அறிவுரைகள் மற்றும் நல்ல செய்திகள் பிடிக்காது. "இந்த வயசானவங்க எப்ப பார்த்தாலும் இப்படித்தான் எதையவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள்" என்று அலுத்துக் கொள்வார்கள்.
ஆசிரியரோ, பெற்றோரோ சொல்லும் கடினமான சொற்கள் அவர்களுக்குப் பிடிக்காது. அதே சமயம் உடன் படிக்கும் மாணவர்கள் "சினிமாவுக்குப் போகலாம், தம் அடிக்கலாம்" என்று சொன்னால் ஆஹா இவன் அல்லவோ என் நலம் விரும்பி என்று அவன் பின்னே செல்வார்கள்.
பிள்ளைகள் மட்டும் அல்ல, நாமும் அப்படித்தான்.
நம் நலம் விரும்புவர்கள் சொல்லும் வன் சொற்கள் பிடிக்காது. மற்றவர்களின் இனிய சொற்கள் பிடிக்கும்.
அப்படி இருக்கக் கூடாது.
சிவ பெருமானை , அர்ஜுனன் வில்லை எறிந்து தாக்கினான். அது சிவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. மன்மதன் மலர் அம்பை சிவன் மேல் எறிந்தான். அதை கண்டு பொறுக்காமல், சிவன் அவனை நெற்றிக் கண்ணால் எரித்து விட்டார்.
பாடல்
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினிது ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஓண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.
பொருள்
மாசற்ற = குற்றம் அற்ற
நெஞ்சுடையார் = மனம் உள்ளவர்கள்
வன்சொலினிது = வன் சொல் இனிது = அவர்கள் சொல்லும் சொற்கள் கடினமாய் இருந்தாலும் நல்லது
ஏனையவர் = மற்றவர்கள்
பேசுற்ற = சொல்லிய
இன்சொல் = இனிமையான சொல்
பிறிதென்க = இனிமாயில் இல்லாதவை என்று உணர்க
ஈசற்கு = சிவனுக்கு
நல்லோன் = நல்லவனான
எறி சிலையோ = எறிந்த வில்லா ?
நன்னுதால் = அழகிய நெற்றியை கொண்ட பெண்ணே
ஓண்கருப்பு = உயர்ந்த கரும்பு
வில்லோன் = மன்மதன்
மலரோ விருப்பு = மலரா விரும்புதல் தரக் கூடியது ?
சிவன் மேல் அர்ஜுனன் அம்பு எய்தது எப்போது?
ReplyDelete