வில்லி பாரதம் - கர்ணன் கேட்ட வரம்
போர்க்களத்தில், அர்ஜுனனின் அம்பு பட்டு, இரத்தம் பெருக்கெடுக்க, தளர்ந்து கீழே விழுந்து விடுகிறான் கர்ணன்.
அப்போது, அங்கே வேதியர் வடிவில் வந்த கண்ணன் எனக்கு நீ ஏதாவது தர்மம் தரவேண்டும் என்று கேட்கிறான்.
அப்போது, கர்ணன் அந்த வேதியரிடம் ஒரு வரம் கேட்கிறான்.
"நான் இதுவரை என்னிடம் வேண்டும் என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லமால் வழங்கி இருக்கிறேன். இன்று, இந்த யுத்த களத்தில், நீங்கள் ஏதாவது கேட்டு நான் தர முடியாத நிலையை உண்டாக்கி விடாதீர்கள்...என்னால் என்ன தரமுடியுமோ அதையே தயவு செய்து கேளுங்கள் " என்று தன்னிடம் தானம் வேண்டி வந்த வேதியரிடம் கர்ணன் வேண்டினான்.
அதை கேட்ட அந்த வேதியனும், "நீ சேர்த்து வைத்திருந்த புண்ணியம் அத்தனையும் தருக " என்று கேட்டான்.
பாடல்
என்று கொண்டு, அந்த அந்தணன் உரைப்ப, இரு செவிக்கு அமுது
எனக் கேட்டு,
வென்றி கொள் விசயன் விசய வெங் கணையால் மெய் தளர்ந்து
இரதமேல் விழுவோன்,
'நன்று!' என நகைத்து, 'தரத் தகு பொருள் நீ நவில்க!' என,
நான் மறையவனும்,
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும்,
உளம் மகிழ்ந்தான்.
பொருள்
என்று கொண்டு = என்று கொண்டு
அந்த அந்தணன் உரைப்ப = அந்த வேதியன் சொன்னதும்
இரு செவிக்கு அமுது எனக் கேட்டு = இரண்டு காதிலும் அமுதம் பாய்ந்தது போல உணர்ந்து
வென்றி கொள் = வெற்றி பெறும்
விசயன் = அர்ஜுனனின்
விசய வெங் கணையால் = பலமான அம்புகளால்
மெய் தளர்ந்து = உடல் தளர்ந்து
இரதமேல் விழுவோன் = இரதத்தின் மேல் விழுகின்ற கர்ணன்
,
'நன்று!' என நகைத்து = நன்று என மகிழ்ந்து
'தரத் தகு பொருள் நீ நவில்க!' என = என்னால் தரக் கூடிய பொருளை நீ கேள் என்றான்
நான் மறையவனும் = அந்த வேதியனும்
'ஒன்றியபடி நின் புண்ணியம் அனைத்தும் உதவுக!' என்றலும் = நீ சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் தருக என்ற கேட்டான் ; அதைக் கேட்டதும்
உளம் மகிழ்ந்தான்.= கர்ணன் உள்ளம் மகிழ்ந்தான்
வாழ் நாள் எல்லாம் சேர்த்து வைத்த புண்ணியம் அத்தனையும் போய் விடும். இனி புண்ணியம் செய்யவும் வழி இல்லை. இருந்த போதும், அவன் மனம் மகிழ்ந்தது.
என்ன ஒரு மனம் அவனுக்கு...
மகாபாரதத்திலேயே மிக உருக்கமான பாத்திரப் படைப்பு கர்ணன்தான். என்ன அருமையான பாடல்!
ReplyDelete