Pages

Wednesday, January 29, 2014

திருவாசகம் - அமுதம் வேண்டாம்

திருவாசகம் - அமுதம் வேண்டாம்


இறை அருள் எங்கும் பொங்கி வழிகிறது.

மெல்லிய வானத்தில், தலை கலைக்கும் தென்றலில், உயிர் நனைக்கும் மழையில்,  கால் உரசும் கடல் அலையில் புன்னைகைக்கும் பூக்களில், குழந்தைகளின் கள்ளமில்லா சிரிப்பில், மனைவியின் கள்ளச் சிரிப்பில், உணவில், நீரில், இசையில் எங்கெங்கும் அருள் பிரவாகம் கரை புரண்டு ஓடுகிறது.

நமக்கு தான் நேரம் இல்லை...இதை பார்கவோ, அனுபவிக்கவோ.

பணம், பொருள், புகழ், அதிகாரம், செல்வாக்கு, எதிர்காலம் என்று அலைந்து கொண்டு இருக்கிறோம்.

நல்லனவற்றை விடுத்து அல்லனவற்றின் பின்னால் சாமாறே விரைகின்றோம்.

புலன்களுக்கும், அறிவுக்கும் ஒரு முடிவில்லா போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.

அறிவு ஒன்றைச் சொல்கிறது. புலன் அதற்கு எதிர் மாறாக வேறொன்றைச் சொல்கிறது. இடையில் கிடந்து அலைகிறோம்.

இந்த போராட்டத்தை மணிவாசகர் படம் பிடிக்கிறார்.


பாடல்

செழிகின்ற தீப் புகு விட்டிலின், சில் மொழியாரில் பல் நாள்
விழுகின்ற என்னை விடுதி கண்டாய்? வெறி வாய் அறுகால்
உழுகின்ற பூ முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
வழி நின்று, நின் அருள் ஆர் அமுது ஊட்ட மறுத்தனனே.

பொருள் 

செழிகின்ற = செழிப்பாக, கொளுந்து விட்டு எரியும்

தீப் புகு விட்டிலின் = தீக்குள் செல்லும் விட்டில் பூச்சியைப் போல. விட்டில் என்னமோ வெளிச்சம் தேடித்தான் போகிறது. சூட்டில் வெந்து சாகிறது. வெளிச்சத்திற்கு கூடவே சூடும் வரும் என்று தெரியாது. புலன் இன்பங்கள் வேண்டும் என்று தான் போகிறோம். சுடும் என்று தெரியாமல்.

ஒவ்வொரு இன்பத்தின் பின்னாலும் ஒரு துன்பம் இருக்கிறது.

இன்பத்தை பார்க்கும் போது, அதன் பின்னால் மறைந்து கிடக்கும் துன்பத்தையும் பார்க்க வேண்டும்.

இல்லை என்றால் விட்டிலுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் ?


சில் மொழியாரில் = "சில்" (chill ) என்று பேசும்  மொழியார்.சில வார்த்தைகள் மட்டும் பேசும் பெண்கள்.

 பல் நாள் = பல நாட்கள்

விழுகின்ற என்னை = விழுந்து கிடக்கின்ற என்னை. விழுவது என்றால் தெரியாமல் செய்வது. தடுக்கி விழுவது. யாரும் வேண்டும் என்றே விழுவது கிடையாது. அறியாமை.

விடுதி கண்டாய்? = என்னை விட்டு விடுவாயா ? விட மாட்டாய்

வெறி = தேன்

வாய் = வாயில் கொண்ட

அறுகால் = ஆறு காலை கொண்ட வண்டுகள்

உழுகின்ற = ஆழமாக தேடுகின்ற

பூ = பூக்களை கொண்ட

முடி = முடியை உள்ள

உத்தரகோசமங்கைக்கு அரசே = திரு உத்தரகோசமங்கைக்கு அரசே,

வழி நின்று = என் வழியில் நீ வந்து நின்று

 நின் அருள் ஆர் அமுது = உன்னுடைய அமுதத்தினை எனக்கு நீ என் வாயில் ஊட்டிய போதும்

ஊட்ட மறுத்தனனே = நான் வேண்டாம் என்று மறுத்தேனே


சிவனின் தலை மேல் பூ இருக்கிறது. அதில் தேன் இருக்கிறது. 

அந்த தேனிக்கு சிவன் வேண்டாம், அந்த தேன் தான் வேண்டும். 

நாமும் அந்த தேனீ போலத்தானோ ?...தேனைத் தேடுகிறோம்...

ஒன்றை நோக்கிப் போகிறோம் என்றால் , வேறு ஒன்றை விட்டு விலகிப் போகிறோம் என்று அர்த்தம். 

நாம் எதைத் தேடுகிறோம் ? அது முக்கியம் 

எதை விட்டு விலகிப் போகிறோம் ? அது அதை விட முக்கியம். 

1 comment:

  1. என்ன ஒரு தூள் பாடல். சிவன் தலையில் இருக்கும் தேனீயும் பூவும், சிவனை அழகு செய்வது மட்டுமல்லாமல், சிற்றின்பத்தை நாடுபவர்க்கு உவமையாகவும் அமைந்தது அருமை.

    இந்த மாதிரிப் பாடல்களில் எல்லாம், சிற்றின்பம் என்று சொல்லப் போகும்போது, "பெண்ணாசை" மட்டுமே கூறுவது ஏன்? பெண் மேல் உள்ள ஆசை, பொருளாசை/புகழாசை/பதவியாசை இவற்றைவிடவும் சக்தி வாய்ந்தது என்பதாலோ?!

    இந்தப் பாடல்கள் எல்லாம் ஆண்களே எழுதியதால், "பெண்ணாசை" என்று எழுதியுள்ளனர். பெண்களுக்கும் ஆணாசை கிடையாதா என்ன?

    ReplyDelete