திருக்குறள் - நாணும் மறந்தேன்
பெண்ணின் மனதை, அவளின் காதலை, அவளின் நாணத்தை வள்ளுவரை போல இன்னொரு கவிஞரால் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
வள்ளுவர் குறள் ஒரு பக்கம் என்றால் பரிமேல் அழகரின் உரை இன்னொரு பக்கம் மெருகூட்டுகிறது.
அவளும் எவ்வளவு நாள் தான் மறைத்து மறைத்து வைப்பாள் தன் காதலை. நாளும் நாளும் அது மனதில் பெருக்கிக் கொண்டே வருகிறது. அவள் தான் என்ன செய்வாள் பாவம். தன் தோழியிடம் தன் காதலைச் சொல்லுகிறாள். வெட்கம் தான், நாணம் தான், என்ன செய்ய. சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. பாழாய்ப்போன இந்த மனம் படுத்தும் பாடு.
நாணத்தையும் மறந்து விட்டேன். அவரை மறக்க முடியாத இந்த மட நெஞ்சினால் என்று வெட்கப் படுகிறாள்.
பாடல்
நாணும் மறந்தேன்-அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு.
பொருள்
நாணும் மறந்தேன் = நாணத்தை மறந்தேன் என்று சொல்லவில்லை. நாணத்தை"யும்" மறந்தேன் என்கிறாள். அப்படியென்றால் நாணத்தோடு கூட அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற பெண்மைக்கே உரிய குணங்களையும் மறந்தேன் என்று பொருள்.
அவர் மறக்கல்லா = அவரை மறக்க முடியாத
என் = என்னுடைய
மாணா = மாட்சிமை இல்லாத
மட நெஞ்சின் பட்டு = மட நெஞ்சோடு சேர்ந்து.
இந்த பாடலுக்கு பரிமேல் அழகரின் உரை இதன் சிறப்பை எங்கோ கொண்டு செல்லுகிறது.
பரிமேல் அழகரின் உரை சற்று கடினமானது. கொஞ்சம் எளிமை படுத்தி தருகிறேன்.
நாணம் என்றால் என்ன ? வெட்கம்.
வெட்கம் என்றால் ?
முதன் முதலில் ஒரு பெண், தனக்கு அறிமுகம் இல்லாத ஒரு ஆணோடு பேசும்போது , பழகும் போது உண்டாகும் ஒரு வித கூச்சம் கலந்த பயம் என்று சொல்லலாம். ஆனால் அது நாள் ஆக நாள் ஆக குறைய வேண்டும் அல்லவா ? அதுதான் இல்லை என்கிறார் பரிமேல் அழகர். ஒவ்வொரு முறை பழகும் போதும் அந்த உணர்ச்சி இருந்து கொண்டே இருக்குமாம்.
பரிமேல் அழகரின் உரை
நாண் - எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல்,
எவ்வளவு நாள் கூடி வாழ்ந்தாலும், ஏதோ அன்றைக்குத் தான் முதன் முதலாக பார்ப்பவர் போல புலன்களை ஒடுக்கி இருத்தல் என்கிறார். அடக்கம்.கூச்சம். பயம். என்ற அனைத்தின் கலவை இந்த நாணம்.
மடமை என்றால் ஏதோ முட்டாள் தனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.பெண்களுக்கு இயல்பாகவே கொஞ்சம் மடத்தனம் இருக்கும் என்று ஒரு நினைப்பு நமக்கு.
பரிமேல் அழகர் அதற்கு விளக்கம் தருகிறார்.
மடமை - கண்டவழி நினைந்து காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல்.
புரிகிறதா ? கொஞ்சம் அடர்த்தியான வாக்கியம்.
எளிமைப் படுத்துவோம்.
பெண்கள், தங்கள் காதலனோ,கணவனோ இல்லாத போது அல்லது வரத் தாமதம் ஆனால் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.என்ன இன்னும் காணமே, இப்ப வர்ற நேரம் தானே, ஒரு வேளை ஏதாவது பிரச்சனையா , அவருக்கு ஆபத்தா என்று மனம் கிடந்து அடித்துக் கொள்ளும் அவர்களுக்கு. வரட்டும் , இன்னைக்கு பேசிக்கிறேன் என்று கொப்பிப்பார்கல்.
அந்த கணவனோ, காதலனோ வந்து விட்டால் பின் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் சிறிது நேரத்தில்.
கண்டவழி நினைந்து = பார்க்கும் போது நினைத்து
காணாதவழி மறக்குந் = பார்க்காத போது மறக்கும்
தவற்றைக் = அந்தத் தவற்றை
காணாவழி நினைந்து = காணாத போது நினைத்து
கண்டவழி மறத்தல் = காண்கின்ற போது மறந்து விடுவார்கள்.
எழுதும் போது கோல் காணாக் கண் போல் என்பார் வள்ளுவர் மற்றொரு இடத்தில்
இதைப் படிக்கும் ஆண்களுக்கு, இன்னும் அர்த்தம் புரியவில்லை என்றால் உங்கள் ,காதலியிடமோ, மனைவியிடமோ இதை வாசித்துக் காட்டி சரிதானா என்று கேளுங்கள். அவர்களின் உதட்டோரம் மலரும் ஒரு புன்னகை, இது சரிதான் என்பதற்கு ஒரு அத்தாட்சி முத்திரை.
சும்மா அல்ஜீப்ரா கணக்கு மாதிரி இருக்கிறது பரிமேலழகர் வாக்கியம்! "கண்டவழி நினைந்து காணாதவழி மறத்தல்" - இது என்னய்யா கொடுமை!
ReplyDelete