Pages

Sunday, February 23, 2014

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி

நீத்தல் விண்ணப்பம் - பிழையே பெருக்கி 


எதை கொடுத்தாலும் அதை வைத்து மேலும் மேலும் பிழை செய்வது மனித இயல்பு. கிடைத்ததை வைத்து நல்லது செய்வது கிடையாது. மேலும் மேலும்  .தவறு செய்வது.

அது  .மட்டும் அல்ல. நாளும் நம் அன்பு சுருங்கிக் கொண்டே வருகிறது. எத்தனை பேரிடம் அன்பு செய்கிறோம் ? எவ்வளவு அன்பு செய்கிறோம் ?

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார்  வள்ளலார்.அது அவரின் அன்பின் வீச்சு.

நாம் , நமக்கு நெருங்கியவர்களைக் கூட   முழுவதும் அன்பு செய்கிறோமா ?

இறைவா, நீ தந்ததை எல்லாம் பெற்றுக் கொண்டு, நாளும் தவறுகளையே செய்து, என் அன்பை சுருக்கி வாழும் இந்த வெற்று அடியேனை விட்டு விடாதே. நீ என்னை கை விட்டு விட்டால் நான் கெட்டுப் போவேன். உன்னை விட்டால் என்னை தாங்குபவர் யாரும் இல்லை. என் வாழ்வின் முதலே. எனக்கு என்று உள்ளவன் நீ மட்டும் தான்.....

பாடல்

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே.


பொருள் 

பெற்றது கொண்டு = என்னவெல்லாம் கிடைக்குமோ அதை எல்லாம் பெற்றுக் கொண்டு

பிழையே பெருக்கி = நாளும் பிழைகளை பெருக்கி

சுருக்கும் அன்பின் = அன்பினைச் சுருக்கி

வெற்று அடியேனை = ஒன்றும் இல்லாத வெறுமையான அடியேனை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா?

விடிலோ = நீ என்னை கை விட்டு விட்டால்

கெடுவேன் = நான் கெட்டுப் போவேன்

மற்று = மேலும்

அடியேன் தன்னை = அடியவனாகிய என்னை

தாங்குநர் இல்லை = தாங்குபவர் யாரும் இல்லை

என் வாழ் முதலே = என் வாழ்வின் ஆதாரமான முதல் பொருளே

உற்று = துன்பங்களை உற்று , அனுபவித்து

அடியேன் = அடியவனாகிய நான்

மிகத் தேறி நின்றேன் = இந்த உலகம் இன்னது என்று அறிந்து தெளிந்து நின்றேன்

எனக்கு உள்ளவனே = எனக்கென்று உள்ளவன் நீயே 

எல்லாம் முடியாவிட்டாலும் அன்பை மட்டுமாவது பெருக்கிப் பாருங்கள். 


1 comment:

  1. இவ்வளவு ஒரு பெரியவர் தன்னை இப்படிக் கீழ்ப்படுத்தி நொந்து கொள்கிறாரே! அவரை அப்படி உணரச் செய்தது என்னவாக இருக்கும்?

    நாமெல்லாம் நம்மை மெச்சிக் கொள்கிறோமே! இந்தப் பாடல்களைப் படித்து நமது உள்ளங்களில் ஒரு துளியேனும் பணிவு வந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete