தேவாரம் - நடுக்கத்தை கெடுப்பது
இராவணன் ஒரு முறை கைலாய மலையை கையால் தூக்கிச் செல்ல நினைத்தான். எதுக்கு தினம் தினம் இலங்கையில் இருந்து இமயமலை வர வேண்டும், பேசாமல் இந்த இமய மலையை பெயர்த்துக் கொண்டு போய் நம்ம ஊர் பக்கம் வைத்துக் கொண்டால் என்ன என்று நினைத்தான்.
தூக்க நினைத்தான். முடியவில்லை. மலையின் கீழ் அகப்பட்டுக் கொண்டான். பின் சிவனை நினைத்து பாடி, வரம் பெற்று விடுதலை பெற்றான் என்பது கதை.
இது என்ன சரியான கோமாளித்தனமாக இருக்கிறதே ? மலையைப் போய் யாராவது கையால் தூக்க நினைப்பார்களா ? நடக்கிற காரியமா அது ?
அது இராவணனின் கதை அல்ல.
என் கதை. உங்கள் கதை. நம் கதை.
உலகில் உள்ள எல்லா இன்பங்களும் வேண்டும் நமக்கு....வீடு வேண்டும், உலகம் சுற்ற வேண்டும், எதிர் காலத்திற்கு சேர்க்க வேண்டும், பிள்ளைகள் பெரிய படிப்பு படிக்க வேண்டும், கார் வேண்டும், பங்களா வேண்டும், நகை நட்டு வேண்டும், ....அது வேண்டும் இது வேண்டும் என்று ஆயிரம் ஆசைகள்.
மலை அத்தனை ஆசைகள். இராவணனோ ஒரு மலையத்தான் தூக்க நினைத்தான்...நாம் எத்தனை மலைகளை தூக்க நினைக்கிறோம்....
ஒவ்வொரு ஆசை மலையும் நம்மை போட்டு அழுத்துகின்றன.
ஐயோ முடியவில்லையே என்று அலறுகிறோம்.
முடிவில் , கடவுளே என்னைக் காப்பாற்று என்று அவனிடம் ஓடுகிறோம்.
மலையை தூக்கச் சொன்னது யார் ? ஆணவம், ஆசை, பேராசை...
மலையின் கீழ் கிடந்து அழுந்தும்போது பயம் வருகிறது, நடுக்கம் வருக்கிறது.
அந்த நடுக்கத்தை கெடுப்பது, அவன் அருள், அவன் நாமம்.
பாடல்
இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
சீர் பிரித்த பின்
இடுக்கண் பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கின் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கிற் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே
பொருள்
இடுக்கண் பட்டு = துன்பப் பட்டு
இருக்கினும் = இருந்தாலும்
இரந்து = யாசகம் கேட்டு
யாரையும் = யாரிடமும்
விடுக்கின் = என்னை இந்த துன்பத்தில் இருந்து விடுவியுங்கள்
பிரான் என்று = பிரானே என்று
வினவுவோம் அல்லோம் = கேட்க மாட்டோம் . தோழனோடாயினும் ஏழைமை பேசேல் என்றாள் அவ்வை.
அடுக்கிற் கீழ் கிடக்கினும் = அடுக்கு என்றால் மலை. மலையின் கீழ் கிடந்து அழுந்தினாலும்
அருளின் = அருளினால்
நாம் உற்ற = நாம் அடைந்த
நடுக்கத்தை கெடுப்பது = நடுக்கத்தை, பயத்தை கெடுப்பது
நமச்சிவாயவே = நமச்சிவாய என்ற நாமமே
இந்தப் பாடலில், இராவணனை நேரடியாகச் சொல்லவில்லை. உன் உரை இல்லாவிட்டால், இராவணன் கதையையும் இந்தப் பாடலையும் இணைத்திருக்கவே முடியாது. வழக்கம் போல அருமையான உரை. நன்றி.
ReplyDelete