இராமாயணம் - கலங்குவது எவரைக் கண்டால் ?
மாலை முடிந்து இரவு ஏறிக் கொண்டிருக்கிறது. தன்னந் தனி சாலை. தெரு விளக்கு மங்கலாக இருக்கிறது. சாலை ஓரம் நெளிந்து வளைந்து ஏதோ ஒன்று கிடக்கிறது.
உங்கள் இதயத் துடிப்பு லேசாக ஏறுகிறது. ஒரு வேளை பாம்பாக இருக்குமோ ?
எச்சரிக்கையோடு , சற்று மெல்லமாக அடி எடுத்து வைக்கிறீர்கள். அது அசைவது போல ஒரு பிரமை.
இன்னும் கொஞ்சம் நெருங்கிய பின் தெரிகிறது, அது பாம்பு அல்ல மாலை என்று.
அறிவு தெளியாத போது தோன்றிய பாம்பு மறைந்து விட்டது. அறிவு தோன்றிய பின் உண்மை எது என்று தெரிகிறது.
நாம் காணும் இந்த உலகம் பாம்பா , மாலையா? மாலை என்று தெரியும் வரை பாம்பு உண்மை என்று நினைத்தோம்.
அது போல இந்த நாம் காணும் உலகம் பாம்பாக இருந்தால் ? மாலை எது ? அதை யார் அறிவார் ?
அறியாமை நீங்கி அறிவு வரும்போது உண்மை தெரியும். எப்போது அறியாமை நீங்கும் ? இராமனைக் கண்டால் அறியாமை நீங்கும் என்கிறார் கம்பர்.
பாடல்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு என, பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப்பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,
மறைகளுக்கு இறுதி யாவார்!
பொருள்
அலங்கலில் = மாலையில். அலங்கல் என்றால் மாலை.
தோன்றும் பொய்ம்மை = தோன்றுகின்ற பொய்த் தோற்றம்
அரவு என = பாம்பு என
பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்
விலங்கிய விகாரப்பாட்டின் = ஒன்றோடு ஒன்று கலந்தும் விலகியும் நின்ற
வேறுபாடு உற்ற வீக்கம் = வேறு வேறாகத் தெரிந்த வீக்கம். வீக்கம் வளர்ச்சி அல்ல. வளர்ந்தது போன்ற ஒரு தோற்றம். வீக்கம் வடிந்து விடும்.
கலங்குவது எவரைக் கண்டால் ? = யாரைப் பார்த்து அந்த பொய்மை பயப்படும் ?
அவர், என்பர் = அவர் என்று சொல்வார்கள்
கைவில் ஏந்தி = கையில் வில்லை ஏந்தி
இலங்கையில் பொருதார் = இலங்கையில் சண்டை போட்டாரே
அன்றே = அன்னிக்கு
மறைகளுக்கு இறுதி யாவார் = அவரே வேதங்களுக்கு இறுதியானவர்
நீங்கள் நிஜம் என்று நினைப்பது எல்லாம் நிஜமாக இருக்குமா ?
பொய்யானவை எல்லாம் போய் அகல வந்தருளி என்பார் மணிவாசகர் சிவபுராணத்தில்
பொய்களை நிஜம் என்று எண்ணி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
சரிதான், இராமனைப் பார்ப்பது எல்லாம் நடக்கிற காரியமா?! அப்படியானால் நாமெல்லாம் இருளிலேயே வாழ வேண்டியதுதான்!
ReplyDeleteஇராமனைக் காண முடியும் அதற்கான ஊக்கமும் சரியான முயற்சியும் இருந்தால்! நம்பினார் கெடுவதில்லை.
Delete