Pages

Tuesday, March 18, 2014

சுந்தர காண்டம் - அறிமுகம்

சுந்தர காண்டம் - அறிமுகம் 


இராமாயணத்தில் மிக முக்கியமான பகுதி சுந்தர காண்டம்.

சுந்தர காண்டம் படித்தால் துன்பங்கள் எல்லாம் விலகி மனதில் அமைதி பிறக்கும் என்பது ஐதீகம்.

துன்பம் இல்லாத மனிதன் யார் ?

உறவுகள், பணம், வேலை, ஆரோக்கியம்,  பிள்ளைகள், கணவன், மனைவி, அண்டை , அயல், அலுவலகம் என்று ஆயிரம் வழிகளில் துன்பம் வருகிறது.

நம் துன்பம் எப்போது குறையும் ?

நம்மை விட அதிக துன்பம் உள்ளவர்களைப் பார்க்கும் போது , நம் துன்பம் அவ்வளவு பெரியதில்லை என்ற ஆறுதல் பிறக்கும். அவர்கள் அவ்வளவு பெரிய துன்பத்தைத் தாங்கிக் கொண்டு சமாளித்து வாழ்கிறார்கள் என்றால் நாம் ஏன் நமக்கு வந்த துன்பத்தை தாங்க முடியாது ? நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.

இராமனுக்கு வராத துன்பமா ?

ஓர் இரவில் , சக்ரவர்த்தியாக வேண்டியவன் முடி துறந்தது மட்டும் அல்ல, காட்டுக்கும்  போக வேண்டி வந்தது என்றால் அதை விட பெரிய துக்கம் என்ன இருக்கும்.

ஒரு பத்து ரூபாய் தொலைந்து விட்டால் எவ்வளவு வருத்தப் படுவோம்.

ஒரு இராஜ்யத்தையே தொலைத்து விட்டால் ? தாங்க முடியுமா நம்மால் ?

துன்பத்தில் பெரிய துன்பம் நமக்கு வரும் துன்பங்கள் அல்ல....நம்மால் மற்றவர்களுக்கு  வரும் துன்பம்.

நம்மால் நம் மனைவியோ, கணவனோ, பிள்ளைகளோ, உடன் பிறப்போ துன்பப் பட்டால்  அது சகிக்க முடியாத துன்பம். நமக்கு வரும் துன்பத்தை நாம் தாங்கிக்  கொள்ளாலாம். நம்மால் மற்றவர்கள் படும் துன்பத்தை தாங்க முடியாது.

சீதையும், இலக்குவனும் இராமன் பொருட்டு கானகம் வந்தார்கள். அது இராமனுக்கு எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கும் ?

அதையும் தாங்கிக் கொண்டான்.

கானகம் போன இடத்திலாவது நிம்மதி உண்டா என்றால் - இல்லை.

கட்டிய மனைவியை மற்றவன் தூக்கிப் போனான்.

மனைவியைப் பறி  கொடுத்தான்.

துன்பம் மேலும் கூடியது.

அதையும் தாங்கிக் கொண்டான்.

அவன் பொருட்டு ஜடாயு உயிர் விட்டான்.

அதையும் தாங்கிக் கொண்டான்.

சக்கரவர்த்தி குமாரன், சுக்ரீவன் என்ற வானரத்திடம் உதவி வேண்டும் என்று கையேந்தி  நின்றான்.

இவ்வளவு துன்பமும் யாருக்கு ?

திருமாலின் அவதாரம் - தசரதனின் குமாரன் - ஜனகனின் மருமகன் - வசிட்டனின் சீடன் - பரசுராமனின் உரம் உருவியவன் - விச்வாமித்ரனின் வேள்வி காத்தவன் .....

அவனுக்கு இவ்வளவு துன்பங்கள் என்றால் , நாம் எல்லாம் எம்மாத்திரம் ?

துன்பம் ஏதோ நமக்கு மட்டும் வந்து விடவில்லை -  அந்த துன்பங்கள் இராமனையும் விட்டு வைக்க வில்லை.

துன்பம் வந்த போது இராமன் என்ன செய்தான் ? எப்படி அவற்றை சமாளித்தான் ?

வாழ்க்கையில் நமக்கும் துன்பம் வரும்.

அவற்றை எப்படி சமாளிக்க வேண்டும் என்று சொல்லித்தரும் பகுதி சுந்தர காண்டம்.


சுந்தர காண்டம் பற்றி மேலும் பார்ப்போம்.



No comments:

Post a Comment