திருக்குறள் - இன்சொல்
இனிய சொல் என்றால் என்ன ?
ஒருவரை பற்றி புகழ்வதா ? நல்லதை கூறுவதா ? அறிவுரை சொல்லுவதா ? ஆறுதல் மொழி கூறுவதா ?
எது இனிய சொல் ?
மிக மிக சிக்கலான கேள்வி.
அதற்கு விடை அளிக்கிறார் வள்ளுவர்.....
இன்சொல் என்பது
- ஈரம் அளவி
- பொய் கலக்காமல்
- உண்மை அறிந்தவர்களின் வாயில் இருந்து வரும் சொல்
பாடல்
இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
சீர் பிரித்த பின்
இன் சொல் ஈரம் அளவி படிறு இல்லாவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்
பொருள்
இன் சொல் = இன் சொல் என்பது
ஈரம் அளவி = அன்பும் கருணையும் கலந்து
படிறு இல்லாவாம் = குற்றம் இல்லாத, பொய் கலக்காத
செம்பொருள் = உயர்ந்த பொருளை
கண்டார் = அறிந்தவர்கள்
வாய்ச் சொல் = வாயிலிருந்து வரும் சொல்
செம்பொருள் என்பதற்கு உண்மையான பொருள் அர்த்தம் கொள்ள வேண்டும். எல்லோராலும், எந்த காலத்திலும் உண்மை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை.
அப்படிப்பட்ட சான்றோர்கள் வாயிலிருந்து வரும் சொற்களே இனிய சொற்கள்.
இனிய சொற்களை சொல்ல வேண்டும் என்றால் முதலில் செம்பொருளை கண்டறியுங்கள்.
உண்மையை அறியாமல் பேசும் எந்த சொல்லும் இனிய சொல் ஆகாது.
உண்மை அறியாமல் பேசும் போது அது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் அது பின்னால் துன்பத்தையே தரும்.
நீங்கள் கண்ட மெய் பொருள் எந்த துறையில் வேண்டுமானாலும் இருக்கலாம்.....
மருத்துவம், பொருளாதாரம், கலை, இலக்கியம், குழந்தை வளர்ப்பு, உளவியல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
அந்தத் துறையில் உள்ள உண்மைகளை கண்டறிந்து, அது சம்பந்தமாக உங்களிடம் யாராவது யோசனை கேட்டால், அன்போடு, கருணையோடு, வஞ்சனை இல்லாமல் நீங்கள் சொல் இனிய சொல்.
அதே போல், இனிய சொல்லை நீங்கள் கேட்க வேண்டும் என்றால் அப்படிப் பட்டவரிடம் சென்று கேளுங்கள்.
மற்றவர்களிடம் நீங்கள் கேட்பது , கேட்கும் அந்த நேரத்தில் சுகமாக இருந்தாலும் அவை நிச்சயமாக இனிய சொற்கள் அல்ல.
இனிய சொற்கள் என்றால் என்ன , அதை யாரிடம் கேட்டுப் பெறலாம், எப்படி அதை மற்றவர்களுக்குத் தரலாம் என்று புரிகிறது அல்லவா ?
"ஈரம் அளவி" என்பது மிக நன்று. எனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கடுமையாகப் பேசக் கூடாது! அருமை.
ReplyDelete