Pages

Sunday, March 9, 2014

இராமாயணம் - உருகு காதலின்

இராமாயணம் - உருகு காதலின் 


இராமனும் சீதையும் சித்ர கூடம் வழியாக செல்கிறார்கள். அந்த இடம் எங்கும் இயற்கை எழில்  .கொஞ்சுகிறது.

சீதைக்கு ஒவ்வொன்றாக காட்டி , இதைப் பார், அதைப் பார் என்று காண்பித்துக் கொண்டே வருகிறான்.

அங்கே ஆன் யானையும் பெண் யானையும் செல்கின்றன. பெண் யானை கரு உற்றிருக்கிறது. அதனால் அவ்வளவு வேகமாக நடக்க முடியவில்லை. சோர்ந்து போகிறது. அப்போது ஆண் யானை, மலைக் குகையில்  தேனீக்கள் தேன் கூடு கட்டி இருக்கின்றன. அந்த தேனீக்களை விரட்டி விட்டு, அதில் இருந்து தேனை எடுத்து, பெண் யானையின் வாயில் உருகுகின்ற காதலோடு ஊட்டி விடுகிறது.

அதனைப் பாராய். என்று சீதைக்கு இராமன் காட்டுகிறான்.

பாடல்


உருகு காதலின் தழைகொண்டு
     மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செந் தேனினை
     முழைநின்றும் வாங்கி,
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு
     பிறை மருப்பு யானை,
பருக, வாயினில், கையின்நின்று
     அளிப்பது - பாராய்!

பொருள்

உருகு காதலின் = உருகிய, உருகுகின்ற, உருகும் காதலின்

 தழைகொண்டு = இலைகளைக் கொண்டு

மழலை வண்டு ஓச்சி = குழந்தைகளைப் போல சத்தம் போடும் வண்டுகளை ஓட்டி

முருகு நாறு = மணம் வீசுகின்ற

செந் தேனினை = இனிய தேனினை

முழை = குகையில் இருந்து

நின்றும் வாங்கி = இருந்து வாங்கி

பெருகு  = நாளும் பெரிதாகிக் கொண்டே வரும்

சூல்= கருவைக் கொண்ட

இளம் பிடிக்கு = இளமையான பெண் யானைக்கு

ஒரு பிறை = ஒரு பிறைச் சந்திரனைப் போல

மருப்பு = தந்தத்தை கொண்ட

யானை = யானை

பருக =  பருக

வாயினில் = அதன் வாயினில்

கையின்நின்று = தும்பிக்கையில் இருந்து

அளிப்பது - பாராய்!  = அளிப்பதைப் பார்

அவள் மட்டும் என்ன, நாமும் பார்ப்போமே !


1 comment:

  1. யானை தேன் உண்ணுமா என்ன??!!

    சும்மா கற்பனைக்கு ஒரு அளவே இல்லை!

    நன்றி.

    ReplyDelete