Pages

Friday, March 7, 2014

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும்

நாலடியார் - துணையிலாற்கு இம் மாலை என் செய்யும் 


மாலை வரும். அவன் வரும் வேளை வரும் என்று கன்னி அவள் காத்திருந்தாள்.

வருவான் காதலன், வந்தபின் தருவான் காதல் இன்பம் நூறு என்று வரும் வழி பார்த்த விழி பூத்திருந்தாள்.

பூவை எடுத்து அந்த பூவை மாலை தொடுத்தாள்.

மாலை வரும் அவனுக்கு என்று மாலை தொடுத்து வைத்தாள்.

மயக்கும் மாலையும் மெல்ல மெல்ல வந்தது.

வந்தார் மற்றோர் எல்லாம்.

அவன் வரவில்லை. வருவான். கொஞ்சம் நேரம் ஆகலாம். அவளுக்கு பொறுக்கவில்லை.

கவலை மாலை மாலையாக நீராக வடிந்தது.

கை மாலை கை நழுவி விழுந்தது.

அவன் வருவானா ? அவள் தனிமை தீர்பானா ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மக்கள் = கம்மம் செய்யும் மக்கள்

கருவி ஒடுக்கிய = தங்கள் கருவிகளை எடுத்து வைத்து விட்டார்கள். வேலை முடிந்தது.

மம்மர்கொள் = மயக்கம் தரும்

மாலை = மாலை

மலராய்ந்து = மலர் + ஆய்ந்து. மலர்களை ஆராய்ந்து எடுத்து

பூத்தொடுப்பாள் = பூக்களை மாலையாக தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலையை

இட்டுக்  = தரையில் போட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு

இம்மாலை = இந்த மலர் மாலையை 

என்செய்வ தென்று  = வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று.


அவள் சோகம், அவள் தனிமை உங்கள் இதயம் தொடுகிறதா ? எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டி   அவளின் தனிமை சோகம் நம் நெஞ்சை ஏதோ செய்கிறது அல்லவா ?

அதுதான் இலக்கியம். 

No comments:

Post a Comment