சுந்தர காண்டம் - எதிர் பாராத பெரிய தடை
அனுமன் இலங்கைக்கு கடலைத் தாவிப் போனான் என்று ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகலாம் தானே ? அதை விட்டு விட்டு ஏன் இவ்வளவு நீட்டி முழங்க வேண்டும் ?
அதில் ஏதோ காரணம் இருக்க வேண்டும் ? ஏதோ செய்தி இருக்க வேண்டும்.
அது என்ன செய்தி என்று நாம் சிந்தித்து அறிய வேண்டும்.
எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் சில தடைகள் வரத்தான் செய்யும்.
இராம காரியமாக அனுமன் செல்கிறான். அவனுக்கே தடை வந்தது என்றால் நம் காரியங்கள் எம் மாத்திரம், அனுமனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது நாம் எம்மாத்திரம் ?
நமக்குத் தடைகள் வரதா ? வரும்.
ஐயோ தடைகள் வந்து விட்டதே என்று நினைத்து ஓய்து விடக் கூடாது. அவற்றை முறியடித்து எடுத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்பது ஒரு செய்தி.
மைநாக மலை கடலின் நடுவே உயர்ந்து எழுந்தது.
எப்படி எழுந்தது தெரியுமா ? ஒரு நொடியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றது.
ஒரு கண்ணாடியின் மேல் உழுந்தை உருட்டி விட்டால் அது எவ்வளவு சீக்கிரம் உருண்டு ஓடுமோ அவ்வளவு நேரத்தில் அது வளர்ந்து நின்றது.
அனுமன் "என்னடா இது " அயர்ந்து நின்றான்.
பாடல்
எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க,
இலங்கும்ஆடி
உழுந்து ஓடுகாலத்திடை, உம்பரின்
உம்பர்ஓங்கிக்
கொழுந்துஓடிநின்ற கொழுங்குன்றை
வியந்துநோக்கி,
அழுங்கா மனத்துஅண்ணல் 'இது என்கொல்'
எனாஅயிர்த்தான்.
பொருள்
எழுந்து ஓங்கி = எழுந்து ஓங்கி
விண்ணொடு மண் ஒக்க = விண்ணும் மண்ணும் ஒன்றாகும் படி நின்ற. அதாவது அதை தாண்டி குதித்துப் போக முடியாது. விண் வரை உயர்ந்து நின்றது.
இலங்கும் = ஒளி வீசி பிரகாசிக்கும்
ஆடி = கண்ணாடி
உழுந்து ஓடு காலத்திடை = ( அதன் மேல் ) உழுந்து உருண்டு ஓடும் காலத்தில்
உம்பரின் உம்பர் ஓங்கிக் = மேலும் மேலும் வளர்ந்து
கொழுந்து ஓடிநின்ற = அதன் சிகரங்கள் உயர்ந்து வளர்ந்து நின்ற
கொழுங் குன்றை = அதன் குன்றங்களை
வியந்துநோக்கி = வியப்புடன் பார்த்து
அழுங்கா மனத்து = புலன் இன்பங்களில் அழுந்தாத மனம் கொண்ட
அண்ணல் = அனுமன்
'இது என்கொல்' = இது என்ன
எனாஅயிர்த்தான். = என்று அதிசயப்பட்டான்
No comments:
Post a Comment