இராமாயணம் - இராமன்தன் யாவருக்கும் இறைவன்
இராவணனன் இறந்து கிடக்கிறான். அவன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.
பிரமனும், சிவனும் கொடுத்த வரங்கள் எல்லாம் உன் பத்துத் தலையோடு பொடியாக உதிர்ந்து போய் விட்டன. இராமன் தான் எல்லோருக்கும் கடவுள் என்று சீதையை தூக்கி வந்த அன்று நீ உணரவில்லை. இன்று வைகுந்தம் போகும் போதாவது உணர்வாயா ?
என்று புலம்புகிறான்.
பாடல்
'மன்றல் மா மலரானும், வடி மழு வாள் படையானும், வரங்கள் ஈந்த
ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன;
அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் அவன் நாட்டை அணுகாநின்ற
இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் யாவருக்கும் இறைவன் ஆதல்?
பொருள்
'மன்றல் = மணம் பொருந்திய
மா மலரானும் = பெரிய தாமரை மலரில் வாழும் பிரம தேவனும்
வடி = வடிவான
மழு = மழுவும்
வாள் படையானும் = வாளை படையாகக் கொண்ட சிவனும்
வரங்கள் ஈந்த = வரங்கள் தந்த போது
ஒன்று அலாதன = ஒன்று அல்லாமல் (பத்துத் தலை)
உடைய முடியோடும் = உடைய தலைகளோடும்
பொடி ஆகி உதிர்ந்து போன = பொடிப் பொடியாக உதிர்ந்து போய் விட்டன
அன்றுதான் = அன்று (சீதையை தூக்கி வந்த அன்று )
உணர்ந்திலையே ஆனாலும் = உணரவில்லை என்றாலும்
அவன் நாட்டை = அவனுடைய நாட்டை (இராமனின் நாடு, வைகுண்டம்)
அணுகா நின்ற = அணுகி நின்ற
இன்றுதான் உணர்ந்தனையே = இன்று உணர்ந்திருப்பாய்
இராமன்தன் = இராமன் தான்
யாவருக்கும் இறைவன் ஆதல் = எல்லோருக்கும் இறைவன் ஆவதை
No comments:
Post a Comment