Pages

Tuesday, April 22, 2014

கம்ப இராமாயணம் - குளிர்ந்தானோ மதியம் என்பான் ?

கம்ப இராமாயணம் - குளிர்ந்தானோ மதியம் என்பான் ?



வீடணன் புலம்பல்.

இராவணன் போரில் அடிபட்டு இறந்து  கிடக்கிறான். அவன் மேல் விழுந்து வீடணன் புலம்புகிறான்.

"நீ வீரர்கள் சென்று அடையும் வீர சுவர்க்கம் அடைந்தாயோ ? உன் பாட்டன் பிரமனின் உலகம் அடைந்தாயோ ?  கைலாயம் அடைந்தாயோ ? உன் உயிரை இப்படி தைரியமாக யார் கொண்டு சென்று இருப்பார்? அது எல்லாம் இருக்கட்டும், இதுவரை உன்னிடம் ஆடிய மன்மதன் இனி ஓய்வு கொள்வானா ? உன்னை  எரித்த சந்திரனும் இனி குளிர்வானா "

என்று புலம்புகிறான்.

மன்மதன் இராவணனோடு விளையாடினானாம். அந்த விளையாட்டு நின்று போய்விட்டதா என்று கேட்கிறான் வீடணன்.

காதல், எவ்வளவு பெரிய ஆளை எங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டது.

ஆச்சரியம்.

பாடல்

வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் முன்பன் 
பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ?
ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே,  கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,
மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 

பொருள்

வீர நாடு உற்றாயோ? = வீரர்கள் அடையும் வீர சுவர்க்கம் அடைந்தாயோ ?

விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் முன்பன்
பேரன் நாடு உற்றாயோ? = எல்லா      உயிர்களையும் படைத்த, அவைகளின் முன்பே தோன்றிய பிரமனின் , உன் பாட்டனின் நாட்டை அடைந்தாயோ ?

பிறை சூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? = பிறை சூடும் சிவனின் கைலாயம் அடைந்தாயோ ?

ஆர், அணா! = யார், அண்ணா ?

 உன் உயிரை, அஞ்சாதே,  கொண்டு அகன்றார்? = உன் உயிரை அஞ்சாமல் கொண்டு சென்றது

அது எலாம் நிற்க = அது ஒரு புறம் நிற்கட்டும்

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? = மன்மதன் உன்னிடம் ஆடிய ஆட்டம் முடித்தானா ?

குளிர்ந்தானோ, மதியம் என்பான்? = இத்தனை நாள் உன்னை எரித்துக் கொண்டிருந்த  சந்திரன் என்பவன் இனி குளிர்வானா ?


1 comment:

  1. என்ன ஒரு நல்ல பாடல்! காதலால் கெட்டவன் இராவணன் என்று சொன்னால் சரிதான்.

    ReplyDelete