கம்ப இராமாயணம் - சூர்பனகை அங்கம் குறைபட்டது - 2
சூர்பனகை சீதையைப் பற்ற வந்தாள். அதைக் கண்டு கோபம் கொண்ட இலக்குவன், அவளின் கூந்தலைப் பற்றி இழுத்து , அவளை உதைத்து தன் உடை வாளை உருவினான்.
சூர்பனகை பார்த்தாள் , இப்படி தன்னோடு சண்டையிடும் இவனையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய் விடலாம் என்று நினைத்தாள் .
அப்படி நினைத்தவளை, "தீமை செய்யாதே " என்று கூறி, அவளுடைய மூக்கும், காதும், முலைக் கண்களையும் ஒவ்வொன்றாக வெட்டி எறிந்தான். அவற்றைப் போக்கிய பின்னரே அவன் சினம் போயிற்று போயிற்று என்றான் கம்பன்.
இது அளவுக்கு அதிகமான தண்டனை என்றே படுகிறது.
பாடல்
ஊக்கித் தாங்கி, ‘விண் படர்வென்‘ என்று உருத்து எழுவாளை
நூக்கி, நொய்தினின், ‘வெய்து இழையேல் ‘என நுவலா,
மூக்கும், காதும், வெம் முரண் முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும், புரி குழல் விட்டான்.
பொருள்
ஊக்கித் = முயன்று
தாங்கி = தூக்கிக் கொண்டு
‘விண் படர்வென்‘ = வானில் செல்வேன்
என்று = என்று
உருத்து = கோபம் கொண்டு
எழுவாளை = எழுகின்றவளை
நூக்கி = கீழே தள்ளி
நொய்தினின் = எளிதாக
‘வெய்து இழையேல் ‘= கொடுமை செய்யாதே
என நுவலா = என்று கூறி
மூக்கும் = மூக்கையும்
காதும் = காதையும்
வெம் = வெம்மையான
முரண் முலைக் கண்களும் = முரடான வலிய முலைக் கண்களையும்
முறையால் = ஒவ்வொன்றாக
போக்கிப் = வெட்டி எரிந்து
போக்கிய சினத்தொடும் = சினம் அடங்கி (காது மூக்கோடு சினமும் போனது )
புரி குழல் விட்டான் = அவள் முடியை விட்டான்
இந்த இடத்தில் வால்மீகி முலையை வெட்டினான் என்று கூறவில்லை என்று சில உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். பெண்மைக்கு முக்கியத்துவம் தரும் கம்பன் ஏன் அப்படி செய்தான் என்று தெரியவில்லை.
என்ன இருந்தாலும்,இது மிக மிக அதீதமான ஒரு தண்டனையாகவே தெரிகிறது.
நாம் படிக்கும் பாடங்கள்
- பெண்ணின் கோபம், வஞ்சம் மிக மிக ஆழமானது. எந்த அளவு வேண்டுமானாலும் போகும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பெண் தானே என்று அலட்சியம் கூடாது.
- கோபம் மிகுந்த துன்பத்தைச் செய்யும்.
- யாருக்கு யாரிடம் உறவோ நட்போ ? யாருக்குத் தெரியும் ? கோவித்து ஒன்று செய்து விட்டால் அல்லது சொல்லி விட்டால் அது எங்கு வந்து வெடிக்குமோ தெரியாது.
உணர்சிகளை கையாளத் தெரிய வேண்டும்.
சூர்பனகை சரியாக கையாளவில்லை. இலக்குவனும் அப்படியே.
சூர்ப்பனகை செய்த தவறு என்ன? ஏற்கெனவே திருமணம் ஆன இராமன் மேல் ஆசைப்பட்டதா? அவளுக்கு இராமன் யார், அவன் திருமணம் ஆனவனா என்று முன்பே தெரியுமா?
ReplyDeleteஇந்த மாதிரி தண்டனை அதிகம்தான். இலக்குவன் அவளது மூக்கை மட்டுமே அருத்ததாகப் படித்திருக்கிறேன். காது, மூக்கு, முலைகள் என்று எல்லாவற்றையுமே வெட்டியது கொடுமை!