இராமாயணம் - விதி நிலையை மதியாத கொள்கை
கம்பன் விதியை ஆழமாக நம்புகிறான்.
செயல்களுக்கு விளைவுகள் இருக்கும் என்றால், விளைவுகள் செயலுக்கு ஆதாரமாக இருக்கின்றன என்று அவன் நம்புகிறான்.
இராமனை கானகம் போகச் சொன்னதை கேட்டு வெகுண்ட இலக்குவனிடம், "நதியின் பிழை அன்று நறும்புனல் இன்மை மைந்த விதியின் பிழை" என்று இராமன் சொல்கிறான்.
அதற்கு இலக்குவன் "விதிக்கும் விதி காணும் என் விற்தொழில் தொழில் காண்டி" என்று சினக்கிற இடத்திலும் கம்பன் விதியை காண்பிக்கிறான்.
இப்படி பல இடத்தில் கம்பன் விதியை கொணர்கிறான்.
இங்கே, போரில் இறந்து விழுந்த இராவணன் மேல் விழுந்து புலம்பும் வீடணனை சாம்பவான் என்ற குரங்கு அரசன் தேறுதல் கூறுகிறான்.
"நீ என்ன இந்த உலகம் அனைத்தையும் மதியினால் வெல்ல முடியும் என்று நினைக்கிறாயா ? விதியை மதியால் வெல்ல முடியாது. விதி என்று ஒன்று இல்லை என்று நினைப்பதால் நீ வருந்துகிறாய். இது எல்லாம் விதியின் படி நடக்கிறது. நீ வருந்தாதே" என்று அவனுக்கு ஆறுதல் கூறுகிறான்.
பாடல்
என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம் எண்கின் வேந்தன்,
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! விதி நிலையை மதியாத கொள்கைத்து ஆகிச்
சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ?' என்ன, தேறி
நின்றான், அப்புறத்து; அரக்கன் நிலை கேட்டாள் மயன் பயந்த நெடுங் கண் பாவை.
பொருள்
என்று ஏங்கி = இறந்து கிடக்கும் இராவணனை பார்த்து ஏங்கி அரற்றுவான்தனை = அழுகின்ற வீடணனை
எடுத்து = கையில் எடுத்து
சாம்பவனாம் எண்கின் வேந்தன் = சாம்பவான் என்ற கரடிகளின் அரசன்
'குன்று ஓங்கு நெடுந் தோளாய்! = குன்று போல் உயர்ந்த தோளினை கொண்டவனே
விதி நிலையை = விதியின் நிலையை
மதியாத = மதிக்காத
கொள்கைத்து ஆகிச் = கொள்கை கொண்டு
சென்று = சென்று
ஓங்கும் உணர்வினையோ? = அப்படி பட்ட அறிவை கொண்டவனா நீ ?
தேறாது வருந்துதியோ?' = அதை அறியாமல் வருந்துகிறாயா ?
என்ன, தேறி = என்று சொன்னவுடன், வீடணன் தேறி
நின்றான் = நின்றான்
அப்புறத்து; = அந்த புறத்தில்
அரக்கன் நிலை கேட்டாள் = இராவணின் நிலை கேட்டாள்
மயன் பயந்த நெடுங் கண் பாவை = மயனின் மகளான மண்டோதரி
நாம் எல்லாம் நம் அறிவால் , நம் திறமையால் செய்து முடித்து விட முடியும் என்று நினைக்கக் கூடாது.
என்ன முயன்றாலும், முடியாத காலங்களும் உண்டு.
எவ்வளவு பெரிய இராவணனுக்கு இப்படி அழிவு வரும் என்று யார் நினைத்து இருப்பார்கள் ?
விதி !
துக்கம் வரும்போது அமைதியாக இருங்கள். இது விதியின் விளைவு என்று இருங்கள். அந்த துக்கத்தை ஏற்றுக் கொள்ளும் வலிமை வரும். அதை சகித்துக் கொள்ளும் பொறுமை வரும்.
உண்மையோ பொய்யோ அது வாழ்கையை இலேசாக மாற்றும்.
No comments:
Post a Comment