இராமாயணம் - சூர்பனகையின் அண்ணன் பாசம்
இலக்குவன் காதையும், மூக்கையும், முலையையும் சிதைத்த பிறகு சூர்பனகை அழுது அரற்றுகிறாள்.
அம்மாவை கூப்பிடவேண்டும் என்று தோன்றவில்லை.
அப்பாவை கூப்பிடவேண்டும் என்று தோன்றவில்லை அவளுக்கு.
கணவன் இல்லை. பிள்ளைகள் இருப்பதாகத் தெரியவில்லை.
அண்ணனை கூப்பிடுகிறாள். அண்ணன் மேல் அவ்வளவு பாசம்.
அண்ணா, என் நிலையைப் பார் என்று வலியின், அவமானத்தின் உச்சியில் இருந்து அரற்றுகிறாள்.
"இந்த உலகில் நிலைத்த புகழோடு நீ இருக்க, தவம் செய்யும் இவர்கள் (இராம இலக்குவனர்கள்) வில்லோடு இப்படி அலைவது ஒரு சிறுமை அல்லவா ? தேவர்கள் கூட உன்னை நிமிர்ந்து பார்க்க அச்சப்படுவார்களே ...கையில் தழலை எடுத்த சிவனின் மலையை கையில் எடுத்த மலை போன்ற உறுதியான உருவம் கொண்டவனே ...இந்த கொடுமையை நீ காண வாராயோ "
பாடல்
'நிலை எடுத்து, நெடு நிலத்து
நீ இருக்க, தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது
அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே!
தழல் எடுத்தான்
மலை எடுத்த தனி மலையே!
இவை காண வாராயோ?
பொருள்
'நிலை எடுத்து = நிலையான புகழைக் கொண்டு
நெடு நிலத்து = நீண்ட இந்த நிலத்தில்
நீ இருக்க = நீ இருக்க
தாபதர்கள் = தவம் செய்பவர்கள் (இராம இலக்குவனர்கள்)
சிலை எடுத்துத் திரியும் இது = வில்லை கையில் கொண்டு திரியும் இது
சிறிது அன்றோ? = சிறுமை அன்றோ
தேவர் = தேவர்களும்
எதிர் = உன் எதிரில்
தலையெடுத்து = நிமிர்ந்து
விழியாமைச் சமைப்பதே! = பார்க்கமால் சிலை போல் நிற்பார்களே (அல்லது அஞ்சி நிற்பார்களே )
தழல் எடுத்தான் = கையில் அனலை எடுத்த (சிவனின் )
மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த
தனி மலையே! = சிறப்பான மலை போன்றவனே
இவை காண வாராயோ? = இவற்றை காண வாராயோ
பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.
பாடலின் அழகை இரசிப்பதா ? அல்லது சூர்பனகையின் அவலத்தை நினைத்து வருந்துவதா என்று தெரியவில்லை.
"தழல் எடுத்தான் மலை எடுத்த தனி மலையே" என்பது இனிமையான சொற்பிரயோகம். ஆனால், எப்படியோ, உணர்சிகளை விட பாடல் அழகே மிகுந்து இருந்ததுபோல் எனக்குத் தோன்றியது.
ReplyDelete