இராமாயணம் - சூர்பனகை செய்த தவறு
சூர்பனகை என்ன தவறு செய்தாள் என்று இராமன் இலக்குவனிடம் கேட்டான்.
அதாவது, இராமனுக்குத் தெரியாது சூர்பனகை என்ன செய்தாள் என்று.
இலக்குவனுக்கும் சரியாகத் தெரியவில்லை.
இவள் சீதையின் பின்னால் போனாள். ஒரு வேளை இவள் சீதையை பிடித்து தின்பதற்கோ, அல்லது இவளுக்கு பின் வேறு யாரும் இருக்கிறார்களோ...எதற்காக இவள் சீதையின் பின்னால் போனால் என்று தெரியவில்லை...கண்கள் தீப் பறக்க இவள் கோபத்தோடு சீதை பின்னால் போனாள்
அவ்வளவுதான் சூர்பனகை செய்த தவறு என்று இலக்குவன் கூறுகிறான்.
சீதைக்கு ஆபத்து என்று இலக்குவன் நினைத்ததில் தவறு காண முடியாது.
ஒரு விசாரணை இல்லை. சந்தேகத்தின் மேல் கொடுக்கப்பட்ட தண்டனை இது.
பாடல்
'தேட்டம்தான் வாள் எயிற்றில்
தின்னவோ? தீவினையோர்
கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த
பொருள் உணர்ந்திலனால்;
நாட்டம்தான் எரி உமிழ,
நல்லாள்மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று
எழுந்தாள்' என உரைத்தான்.
பொருள்
தேட்டம்தான் = தேடுவது (சூர்பனகை தேடுவது )
வாள் = வாள் போன்ற கூரிய
எயிற்றில் = பற்களால்
தின்னவோ? = தின்பதற்கோ ? (கேள்விக் குறி...சந்தேகம் )
தீவினையோர் = தீவினை செய்பவர்கள்
கூட்டம்தான் = கூட்டம்
புறத்து உளதோ? = வெளியே இருக்கிறதோ (மறுபடியும் கேள்விக் குறி...சந்தேகம்)
குறித்த பொருள் = எதற்காக இவள் வந்து இருக்கிறாள் என்று
உணர்ந்திலனால் = தெரியாததால்
நாட்டம்தான் = அவளின் நோக்கம், இங்கே விழி
எரி உமிழ = தீக் கக்க
நல்லாள்மேல் = சீதையின் மேல்
பொல்லாதாள் = பொல்லாதவளான சூர்பனகை
ஓட்டந்தாள்; = பின்னால் வேகமாக போனாள்
அரிதின் = யாருக்கும் தெரியாமல்
இவள் = சூர்பனகை
உடன்று = தீராக் கோபத்தோடு
எழுந்தாள்' = எழுந்தாள்
என உரைத்தான் = என்று கூறினான்
சூர்பனகை கோபத்தோடு சீதையின் பின்னால் போனாள் .
அது தான் அவள் செய்த தவறு என்று இலக்குவன் கூறுகிறான்.
சீதைக்கு துணையாக இலக்குவன் என்ற வீரம் மிக்க ஆண்மகன் இருக்கிறான் என்று தெரிந்தாலே சூர்பனகை ஓடிப் போய் இருப்பாள்.
அவளை மிரட்டி விரட்டி இருக்கலாம்.
வேண்டுமானால் இரண்டு அடி கூட கொடுத்து இருக்கலாம்.
முக்கியமான கேள்விகள் பின்வருபவை ஆகும்:
ReplyDeleteஒன்று, சூர்ப்பனைக்கு இராமன் யார், அவர் திருமணம் ஆனவனா என்பது தெரியுமா?
இரண்டு, அவள் இராமன் மேல் ஆசைப்படுகிறாள் என்பது இலக்குவனுக்குத் தெரியுமா? (இந்த Blog பாடலைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை).
மூன்று, அப்படியே அவளுக்கு அறிவுரை சொல்லியோ, பயமுறுத்தியோ ஏன் இலக்குவன் அனுப்பவில்லை?
நான்கு, இராமனுக்கு இதெல்லாம் நடந்தது தெரியாதா?
இதைப் படிக்கும்போது, இந்த வாரம் ஒரு பெண்ணை பாகிஸ்தானில் கல்லால் அடித்துக் கொன்றதுதான் நினைவுக்கு வருகிறது.