இராமாயணம் - திருத்தமே அனையவன்
பிரமன் இராவணனைப் படைத்தான். ஏதோ சரி இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.
கொஞ்சம் திருத்தினான். அப்புறமும் சரி இல்லை என்று பட்டது.
இன்னும் கொஞ்சம் திருத்தினான்.
இப்படி மாறி மாறி திருத்தி திருத்தி உன்னதமாக வடிவமைக்கப் பட்ட உருவம் இராவணனின் உருவம்.
திருத்தங்களின் மொத்த உருவம் அவன். Perfect Person. "திருத்தமே அனையவன்"
அப்பேற்பட்ட இராவணன் போரில் இறந்து கிடக்கிறான். அவன் மேல் அரக்கியர்கள் விழுந்து அழுகிறார்கள்.
அவர்களுக்கு வாழ்க்கை என்ன என்றால் அவனோடு எப்போதும் பொருந்தி வாழ்வது மட்டும்தான்.
அவர்களுக்குத் துன்பம் எது என்றால் அவனை விட்டு பிரிந்து இருப்பது மட்டும் தான்.
அப்படிப்பட்ட அரக்கியர் அவன் மேல் விழுந்து புலம்பினார்கள். அவர்கள் உடல் அவன் மேல் விழவில்லை....அவர்களின் உயிர் அவன் மேல் விழுந்து அழுததாம்.
பாடல்
வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும்
பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார்,
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து, உயிரின் புல்லினார்-
திருத்தமே அனையவன் சிகரத் தோள்கள்மேல்.
பொருள்
வருத்தம் ஏது எனின் = (அரக்கியர்களுக்கு) வருத்தம் என்ன என்றால்
அது புலவி = (இராவணனை விட்டு விலகி இருத்தல்)
வைகலும் = நாளும்
பொருத்தமே வாழ்வு = அவனோடு பொருந்தி இருப்பதே வாழ்க்கை
எனப் பொழுது போக்குவார் = என பொழுதைப் போக்குவார்
ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து = ஒருவர் மேல் ஒருவர் விழுந்து
உயிரின் புல்லினார் = உயிரால் தழுவினார்கள்
திருத்தமே அனையவன் = திருத்தங்களின் மொத்த உருவமான இராவணனின். இந்த வார்த்தைக்கு பல பொருள் சொல்கிறார்கள். திருத்தி அமைக்கப் பட்ட தோள்கள் என்கிறார்கள். தீர்த்தம் என்பதன் மருஊ என்று பாடம் சொல்வாரும் உண்டு. தவறுகள் ஏதும் இன்றி, அப்பழுக்கு இல்லாத வடிவம் உடையவன் இராவணன் என்பது சரியான அர்த்தம் என்று தோன்றுகிறது.
சிகரத் தோள்கள்மேல் = மலை போன்ற தோள்களின் மேல்
"திருத்தமே அனையவன்", "உயிரின் புல்லினார்" - இந்த இரண்டு சொற்களிலுமே மொத்தப் பைசா வசூல்!
ReplyDeleteஆமாம், புலவி என்றால் சேருதல் என்று பொருள் அல்லவோ?