Pages

Sunday, June 1, 2014

இராமாயணம் - ஓடிப் போ

இராமாயணம் - ஓடிப் போ 


சீதையைத் தொடர்ந்து வந்தாள் இந்த சூர்பனகை , நல்லாள் பின் சென்றாள் பொல்லாள், சூர்பனகையால் சீதைக்கு ஏதேனும் துன்பம் வருமோ என்று எண்ணி அவளின் மூக்கையும், காதையும், முலையையும் நான் வெட்டினேன் என்றான் இலக்குவன், இராமனிடம்.

அவன் அப்படி சொல்லி முடிக்கக் கூட இல்லை, சூர்பனகை உடனே சொல்லுவாள், தன் கணவன் மற்றொரு பெண்ணுடன் இருந்தாள் எந்த பெண்ணுக்குத்தான் கோபம் வராது என்று.

இராமனைத்  தன் கணவனாகவே அவள் நினைத்துக் கொள்கிறாள்.

இராமன் திருமணம் ஆனவன் என்று சூர்பனகை அறிவாள் .

அதைக் கேட்ட பின் இராமன் சொல்கிறான்

"மாயப் போரில் வல்லவர்களான அரக்கர்களின் குலத்தை ஒரேயடியாக அழிக்க வந்திருக்கிறோம் நாங்கள். நீ தீய சொற்களை சொல்லி வீணாகப் போகாதே. இந்த காட்டை விட்டு ஓடிப் போ "

என்கிறான்.

பாடல்

'பேடிப் போர் வல் அரக்கர்
     பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று,
     தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம்
     மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ' என்று உரைத்த
     உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்:

பொருள்

'பேடிப் போர் = மாயப் போரில்

வல் அரக்கர் = வல்லவர்களான அரக்கர்களின்

பெருங் குலத்தை = பெரிய குலத்தை

ஒருங்கு அவிப்பான் = ஒரேயடியாக அழிப்பதற்கு

தேடிப் போந்தனம் = தேடி புறப்பட்டு வந்து இருக்கிறோம்

இன்று = இன்று

தீ மாற்றம் = தீ போன்ற மாற்று பேச்சுகளை

சில விளம்பி = சிலவற்றைச் சொல்லி

வீடிப் போகாதே = வீணாகப் போகாதே

இம்  = இந்த

மெய் வனத்தை விட்டு = உண்மையான வனத்தை விட்டு அல்லது உண்மை தேடும் முனிவர்கள் நிறைந்த வனத்தை விட்டு (வனம் = காடு )

அகல ஓடிப் போ' = விலகி (அகன்று ) ஓடிப் போ

என்று உரைத்த = என்று கூறிய

உரைகள் தந்தாற்கு, =வார்த்தைகளை சொன்ன இராமனுக்கு

அவள் உரைப்பாள் = அவள் (சூர்பனகை) பதில் சொல்லுவாள்

இலக்குவன் சந்தேகப் பட்டான். அதில் உண்மையும் இருந்தது. சீதைக்கு தீமை செய்யத்தான்  சூர்பனகை சென்றாள் . அதில் சந்தேகம் இல்லை.

மூக்கையும் , காதையும், முலையையும் வெட்ட வேண்டிய அளவுக்கு அது ஒரு பெரிய  தவறா ?

சூர்பனகை செய்த தவறுதான் என்ன ?

நான் படித்த உரைகளில் இரண்டு பெரிய தவறுகளைச் சொல்லுகிறார்கள்:

முதலலவது, சூர்பனகை இராமனையும் சீதையையும் பிரிக்க நினைத்தாள். இராமனையும்   சீதையையும் ஒன்றாகத்தான் சேர்த்துப் பார்க்க வேண்டும். சூர்பனகை இராமன் மட்டும் வேண்டும் என்றால். இராவணன், சீதை மட்டும் வேண்டும் என்றான். இது ஒரு பாவம் என்று சொல்கிறார்கள்.

அனுமன் சீதையையும் இராமனையும் சேர்க்க பாடு பட்டான். சிரஞ்சீவி ஆனான்.

இராவணனும் சூர்பனகையும் அவர்களை பிரிக்க முயன்றார்கள். அழிந்து போனார்கள்.

ஒரு படி   மேலே போனால், கணவன் மனைவியை பிரிப்பது பெரிய குற்றம்.

இன்னொரு குற்றம்,ஒரு பெண் தன் உணர்சிகளை, குறிப்பாக காம உணர்சிகளை  வெளிப்படையாக காட்டியது ஒரு தவறு என்கிறார்கள். பெண் அளவுக்கு அதிகமாக  காம வசப் பட்டால் அழிவு நேரும் என்கிறார்கள். அடக்கம் என்ற பெண்மை  குணம் இல்லாமல் காமத்தை கொட்டி தீர்த்தது  ஒரு குற்றம்  என்று ஒரு வாதம் இருக்கிறது.

உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்....


3 comments:

  1. "இராமன் திருமணம் ஆனவன் என்று சூர்பனகை அறிவாள்" என்று நீ எழுதியிருக்கிறாய். அதன் அடிப்படை என்ன?

    இராமன் திருமணம் ஆனவன் என்று தெரியாததால்தான், சூர்ப்பனகை அவனை மனதால் கணவனாக எண்ணினால் என்றும் கொள்ளலாமே?

    இராமன் திருமணம் ஆனவன் என்று அறிந்தபின்னும், அவனை விரும்பினால் அது குற்றமா என்ற கேள்வி பிறக்கிறது. அந்தக் கால முறைப்படி அது குற்றமே; அதனால் அவளைத் தண்டித்தது சரியே என்று வாதாடலாம். அப்ப-அடியே கொண்டாலும், குற்றத்துக்குத் தகுந்த மாதிரி தண்டனை தராமல், காட்டுமிரண்டித்தனமாக இலக்குவன் நடந்து கொண்டிருக்கிறான்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இராமன் திருமணமானவன் என்று இராமன் தன் வாயிலாகவே சொல்லி சூர்ப்பனகைக்கு தெரியும். மற்றும் இந்த தண்டனை தான் சரி என்று தீர்மானித்தே லக்ஷ்மணன் செயல் பட்டான் என்று தோன்றுகிறது. எது எப்படி ஆனாலும் சூர்ப்பனகை பற்றி இவ்வளவு விஷயம் இருக்கிறது என்று அறிந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ராமாயண கதை முன்னே நகர்வதற்கு உதவிய ஒரு சிறிய character தான் சூர்ப்பனகை என்ற நினைப்பிலிருந்த எனக்கு இவ்வளவு அருமையான கம்ப ராமாயணப் பாடல்கள் மூலம் பல விஷயங்களை தந்த RSக்கு நன்றி

      Delete