இராமாயணம் - நிலம் தந்த திருமகள்
சீதை நிலத்தில் இருந்து பிறந்தாள் என்று படித்து இருக்கிறோம்.
ஏன் நிலம் சீதையை தந்தது என்று சூர்பனகை சொல்கிறாள்.
தேவர்கள் பாற்கடலை கடைந்த போது அதில் இருந்து திருமகள் தோன்றினாள். அதற்குப் போட்டியாக நில மகளும் நாமும் திருமகளுக்கு இணையான ஒரு பெண்ணைத் தர வேண்டும் என்று சீதையை தந்ததாம்.
தேரின் மேல் பாகம் போல இடுப்பைக் கொண்ட சீதை, தேவலோகத்திலும், மண்ணுலகிலும், கச்சணிந்த பெண்களின் வயிற்றில் பிறந்தவள் அல்ல. தாமரை பூவில் இருக்கும் திருமகளை, தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது , அதில் வந்த சங்கில் இருந்து திருமகள் தோன்றினாள் . அதை விட சிறப்பாக மண் மகள் சீதையைத் தந்தாள் "
என்றாள்
பாடல்
“தேர் தந்த அல்குல் சீதை,
தேவர்தம் உலகின், இம்பர்,
வார் தந்த கொங்கையார் தம்
வயிறு தந்தாளும் அல்லள்;
தார் தந்த கமலத் தாளைத்
தருக்கினர் கடையச் சங்க
நீர் தந்தது, அதனை வெல்வான்
நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே.‘‘
பொருள்
“தேர் தந்த அல்குல் சீதை = தேரின் மேல் பாகம் போல இடுப்பைக் கொண்ட சீதை
தேவர்தம் உலகின் = தேவர்களின் உலகிலும்
இம்பர் = இந்த மண் உலகிலும்
வார் தந்த கொங்கையார் தம் = கச்சை அணிந்த பெண்களின்
வயிறு தந்தாளும் அல்லள் = வயிற்றில் பிறந்தவள் அல்லள்
தார் தந்த கமலத் தாளைத் = மலர்ந்த தாமரையில் இருக்கும் இலக்குமியை
தருக்கினர் = சண்டை போட்டவர்கள் (தேவர்களும் அசுரர்களும் )
கடையச் = கடைந்த போது
சங்க நீர் தந்தது = சங்கில் உள்ள நீரில் இருந்து வந்தவள் இலக்குமி
அதனை வெல்வான் = அதை வெல்லும் படி
நிலம் தந்து, நிரம்பிற்று, அன்றே. = நிலம் சீதையைத் தந்தது.
இலக்குமியை விட சிறந்தவள் சீதை.
சூர்பனகையின் வர்ணனையால் இராவணன் சீதை மேல் மோகம் கொள்கிறான். அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவனை கிறங்க அடிக்க வேண்டும் என்றால் சீதை எப்படி இருக்க வேண்டும் ? அதை தன் வார்த்தைகளில் கொண்டு வருகிறாள் சூர்பனகை.
இன்னும் சில பாடல்கள் இருக்கின்றன.
அதன் பின் இராவணன் காமத்தில் படும் பாட்டை கம்பன் சொல்லுவான். அந்த காம வேதனையிலும் சில வாழ்க்கை பாடங்களை நமக்கு உணர்த்துவான் கம்பன். "காமத்தை வெல்வது எப்படி " என்பது அதில் ஒரு பாடம்,
இரண்டையும் பார்ப்போம்.
No comments:
Post a Comment