இராமாயணம் - சவரி - ஓர் மூலம் இல்லான்
ஆரண்ய காண்டத்தின் கடைசிப் பகுதி சவரி மோட்சம். வெகு சில பாடல்களே உள்ள படலம்.
இராமனும், இலக்குவனும் சவரியைப் பார்த்தார்கள். சவரி அவர்களை உபசரித்தாள். அவர்களை சுக்ரீவன் இருக்கும் மலைக்குப் போகச் சொன்னாள். பின் இந்த உடலை விடுத்து விண்ணுலகம் சென்றாள் . அவ்வளவுதான்.
இராமனுக்கும் சவாரிக்கும் நடக்கும் உரையாடல் மிக மிகச் சிறிய ஒன்று. இருந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் நீண்ட காலம் அறிந்தவர்களைப் போல பேசிக் கொள்கிறார்கள்.
நீண்ட நாள் கழித்து ஒரு நண்பனை சந்தித்தால் எப்படி இருக்குமோ, அந்த மன நிலையை கம்பர் கட்டுகிறார்.
சவரி இராமனின் வரவுக்காக நீண்ட நாள் காத்து இருக்கிறாள். அவன் வருவான் என்று அவளுக்குத் தெரியும்.
இராமன் அந்த கானகம் வர வேண்டும் என்றால் அதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. அவன் முடி சூட்டிக் கொண்டு அயோத்தியில் இருந்து அரசாள இருந்தவன்.
விதி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு இராமனை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. ஆனால், எப்படியோ இராமன் வருவான் என்று சவரி நம்பினாள் .
அவன் நம்பிக்கை வீண் போகவில்லை.
இராமன் அவளைப் பார்த்து "ஒரு குறையும் இல்லாமல் வாழ்ந்து வந்திருக்கிறாய் போல் இருக்கிறது " என்று அன்புடன் வினவுகிறான்.
அப்படி கேட்டவன் யார் ?
அவனுக்கு முன்னால் ஏதோ ஒன்று இருந்தது என்று எண்ணக் கூட முடியாத அளவுக்கு எல்லாவற்றிற்கும் மூல காரணமாய் நின்ற இராமன்.
அவன் தான் ஆதி மூலம். அவனுக்கு முன்னால் எதுவம் கிடையாது.
எல்லாவற்றையும் இறைவன் படைத்தான் என்றால் இறைவனைப் படைத்தவன் யார் என்ற கேள்வி எழும் . அப்படி இறைவனைப் படைத்தவன் அல்லது படைத்தது என்று ஒன்று உண்டா இல்லையா என்று தெரியாது. அப்படியே ஒன்று இருந்தாலும், அதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது என்கிறார் கம்பர்.
"அவனுக்கு முன்னால் " எது என்பதை எண்ணிக் கூட பார்க்க முடியாது.
பாடல்
அன்னது ஆம் இருக்கை நண்ணி,
ஆண்டுநின்று, அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்
தலைப்பட்டு, அன்னாட்கு
இன்னுரை அருளி, 'தீது இன்று
இருந்தனைபோலும்' என்றான் -
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
ஓர் மூலம் இல்லான்.
பொருள்
அன்னது ஆம் இருக்கை நண்ணி = அப்படி அவள் இருந்த இடத்தை அடைந்து
ஆண்டுநின்று = அங்கிருந்த
அளவு இல் காலம் = அளவில்லாத காலம். நீண்ட காலம்
தன்னையே நினைந்து = தன்னையே நினைந்து
நோற்கும் = நோன்பு இருக்கும். தவம் இருக்கும்
சவரியைத் = சவரியை
தலைப்பட்டு,= நெருங்கி
அன்னாட்கு இன்னுரை அருளி, = அவளுக்கு பல இனிய உரைகளை நல்கி
'தீது இன்று இருந்தனைபோலும்' என்றான் = ஒரு தீமையும் உன்னை அண்டாமல் இருந்தாய் போலும் என்றான்
முன் இவற்கு இது = இவனுக்கு முன்னால் இது இருந்தது
என்று எண்ணல் ஆவது = என்று எதையுமே எண்ண முடியாத
ஓர் மூலம் இல்லான்.= ஒரு மூலப் பொருள் ஆனான்
கம்ப ராமாயணத்தின் பல சுவை மிகுந்த பாடல்களை உங்கள் பதிவுகள் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறேன். அதிலும் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தத்துடன் பதியும்போது இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. மிக்க நன்றி!
ReplyDelete