பிரபந்தம் - ஐம்புலன்களை அருள் எனும் வாளால் வெட்டி எறிந்து
மனைவியும் மக்களும் எவ்வளவு தூரம் உதவுவார்கள். ஏதோ கொஞ்ச காலம், கொஞ்ச நேரம் உதவி செய்வார்கள். பிள்ளைகள் அவர்கள் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போய் விடுவார்கள். மனைவி அலுப்பாள்.
முடியாத காலத்தில் அவர்கள் உதவுவார்கள் என்று கனவு காணக் கூடாது.
அவர்களை விடுங்கள்...அவர்கள் நமக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஆசா பாசங்கள் இருக்கின்றன.
நம்முடைய புலன்களே நமக்கு உதவி செய்யாது. கண் சரியாகத் தெரியாது, காது சரியாகக் கேட்காது.
நம் புலன்களே நமக்குத் துணை இல்லை.
நம் மனைவி மக்கள் நமக்குத் துணை இல்லை.
இதை எல்லாம் அறிந்து கொண்டு உன் திருவடி வந்து அடைந்தேன் என்கிறார் திருமங்கை ஆழ்வார்.
பாடல்
பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவரு ளென்னுமொள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன் கள்இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே.
சீர் பிரித்த பின்
பிறிந்தேன் பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர் பின் உதவா
அறிந்தேன் நீ பணித்த அருள் என்னும் ஒரு வாள் உருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்து வந்து
செறிந்தேன் நின்னடிக்கே திரு விண்ணகர் மேயவனே.
பொருள்
பிறிந்தேன் = பிரிந்து வந்தேன்
பெற்ற மக்கள் = பெற்ற பிள்ளைகள்
பெண்டிர் = மனைவி
என்று = என்று
இவர் = இவர்கள்
பின் உதவா = பின்னாளில் உதவ மாட்டார்கள் என்று
அறிந்தேன் = அறிந்தேன்
நீ பணித்த = நீ அளித்த
அருள் என்னும் ஒரு வாள் உருவி = அருள் என்ற வாள் உருவி
எறிந்தேன் = வெட்டினேன்
ஐம்புலன்கள் = ஐந்து புலன்களை (அவை தரும் இன்பங்களை)
இடர் தீர = துன்பம் தீர
வெறிந்து வந்து = ஆர்வத்துடன்
செறிந்தேன் = அடைந்தேன்
நின்னடிக்கே = உன் திருவடிகளுக்கே
திரு விண்ணகர் மேயவனே = விண்ணகரம் என்ற திருத்தலத்தில் உறைபவனே
"..கொட்டி முழக்கி அழுதிடுவார் மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே..." என்று பட்டினத்தாரும் புலம்பினார்.....
ஏன் மனைவி உதவ மாட்டாள் என்று மட்டும் வருகிறது? வயதாகி விட்டால் கணவன் உதவ மாட்டான் என்பது உண்மைதானே?!
ReplyDelete