மூத்த திருப்பதிகம் - எங்கள் அப்பன் ஆடும் திருவாலங்காடே
காரைக்கால் அம்மையார் பாடியது மூத்த திருப்பதிகம். தான் பேய் உரு பெற்றபின், சுடுகாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பற்றி பாடி இருக்கிறார்.
ஒரு பெண் பேயைப் பற்றி பாடி இருப்பது ஆச்சரியமான விஷயம்.
சுடு காட்டில் பூஜை செய்பவர்கள் ஓமம் வளர்ப்பார்கள். அந்த ஓம குண்டத்தில் சோற்றினை போட்டு தீ வளர்ப்பார்கள். பூஜை முடிந்தவுடன், நெருப்பு தணிந்தவுடன், காட்டில் உள்ள நரிகள் அந்த சோற்றை தின்ன வரும்."அடடா இது நமக்கு முன்னாலேயே தெரியாமலேயே போய் விட்டதே. தெரிந்திருந்தால் முன்னமேயே வந்து நாம் இதை உண்டிருக்கலாமே" என்று பேய்கள் ஓடி வந்து நரிகளோடு போட்டி போடும்.
அந்த சுடுகாட்டில் வசிப்பவள் காளி. அந்த காளியோடு வாதம் செய்து, போட்டி போட்டு, காலை ஆகாயம் வரை தூக்கி நடனம் ஆடும் எங்கள் அப்பன் சிவன் உள்ள இடம் இந்த சுடுகாடு
பாடல்
குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன, ‘அதனை முன்னே
கண்டிலம் என்று கனன்று பேய்கள்
கையடித்(து) ஓ(டு)இடு காட்ட ரங்கா
மண்டலம் நின்றங்(கு) உளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்த்(து) ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.
பொருள்
குண்டின்ஓ மக்குழிச் = ஓமக் குண்டத்தின் குழியில் உள்ள
சோற்றை வாங்கிக் = சோற்றினை எடுத்து
குறுநரி தின்ன, = குள்ள நரிகள் தின்ன
‘அதனை = அந்த சோறு அங்கே இருக்கிறது என்று
முன்னே = முன்பே
கண்டிலம் = நாம் காணவில்லையே
என்று = என்று
கனன்று = கோபம் கொண்டு
பேய்கள் = பேய்கள்
கையடித்(து) = கையை அடித்துக் கொண்டு
ஓ(டு) = ஓடி வரும்
இடு காட்ட ரங்கா = இடு காட்டை அரங்கமாக கொண்டு
மண்டலம் = மண்டலம் எங்கும்
நின்றங்(கு) = நின்று அங்கு
உளாளம் இட்டு = இருப்பவள் (காளி )
வாதித்து = அவளிடம் வாதம் செய்து
வீசி எடுத்த பாதம் = காலைத் தூக்கி ஆடி
அண்டம் உறநிமிர்த்(து) = அண்டம் நிமிர்ந்து பார்க்க
ஆடும் எங்கள் = ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே.= அப்பன் (சிவன்) இருக்கும் இடம் திருவாலங்காடே
சுடு காடு என்பது வேறு எதுவும் அல்ல....நாம் இருக்கும் இடம் தான். பேய்களும், நரிகளும் உணவுக்கு அடித்துக் கொள்ளும் இடம் இதுதான்.
சுடு காடு என்பது நாம் வாழும் இடத்தின் ஒரு பகுதி.அது ஏதோ வேறு கிரகத்தில் உள்ளது அல்ல.
சுடுகாட்டின் எல்லைகளை சற்று விரிவாக்கிப் பாருங்கள். உலகம் பூராவும் சுடுகாடாய் தெரியும்.
சண்டையும், போட்டியும் , ஆணவமும் , பொறாமையும் இங்குதான்.
இதற்கு நடுவில் ஊடாடும் அந்த இறை தன்மையை காண கண் வேண்டும்.
No comments:
Post a Comment