இராமாயணம் - உணர்வின் உண்ணும் அமுதத்தின் சுவையாய் நின்றான்
சில சமயம் சிறு பிள்ளைகள் தங்கள் ஆசிரியரிடமோ அல்லது பெற்றோரிடமோ வந்து தாங்கள் புதியதாய் கற்றுக் கொண்ட ஒன்றைப் பற்றி சொல்லுவார்கள்....ஆசிரியரோ பெற்றோரோ .."அப்படியா, அது எப்படி" என்று ஆச்சரியமாக ஒன்றும் தெரியாதவர்கள் போல கேட்பார்கள். பிள்ளைகளுக்கு இன்னும் மகிழ்ச்சி. பிள்ளைகளின் அறிவைக் கண்டு பெரியவர்களுக்கு மகிழ்ச்சி.
அது ஒரு புறம் இருக்கட்டும்
இராமனுக்கு உபசாரம் எல்லாம் செய்த பின், சவரி முக்தி அடையும் வழிகளை இராமனுக்கு எடுத்துச் சொன்னாள். அவள் சொன்னதை எல்லாம் இராமன் கேட்டுக் கொண்டான்.
அப்படி கேட்டுக் கொண்டவன் யார் தெரியுமா ?
கல்வி கேள்விகளில் சிறந்த பெரியவர்கள், அவர்கள் உணர்வில் அனுபவிக்கும் அமிர்தத்தின் சுவை போல இருந்த இராமன்.
அமுதம் என்றால் ஏதோ ஒரு வகை உணவு பதார்த்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதை உண்டால் மரணத்தை வெல்லலாம் என்றும் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால் கம்பன் சொல்கிறான் அமிர்தம் என்பது ஏதோ உண்ணும் பண்டம் அன்று. அது வாயால் உண்ணும் பண்டம் அன்று. உணர்வால் உண்ணும் பண்டம். உணர்ந்து அறிய வேண்டிய ஒன்று.
"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" என்பார் மணி வாசகர்
"உலகெலாம் உணர்ந்து ஓதர் கரியவன் " என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்
அப்படி உணர்வில் உண்ணும் அமுதின் சுவை போல இருந்தான் இராமன்.
பாடல்
வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி
வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன,
அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ -
கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின்
சுவையாய் நின்றான்.
பொருள்
வீட்டினுக்கு = வீடு பேற்றினை அடைவதற்கு
அமைவது ஆன மெய்ந்நெறி = அமைந்த உயர்ந்த வழிகளை
வெளியிற்று ஆகக் = வெளிப்படையாக தெரியும்படி
காட்டுறும் அறிஞர் என்ன = காட்டுகின்ற அறிஞர்களைப் போல
அன்னவள் கழறிற்று எல்லாம் = அவள் கூறியவற்றை எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ = கேட்டான்
கேள்வியால் = கேள்விகளால்
செவிகள் முற்றும் தோட்டவர் = காதுகள் துளைக்கப் பெற்றவர்கள்
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி
என்பது வள்ளுவம்.
(அது என்ன தோட்கப் படாத செவி (துளைக்கப் படாத செவி). ? அது பற்றி பின்னொரு சமயம் சிந்திப்போம்).
சுவையாய் நின்றான் = சுவை போல நின்ற இராமன்
No comments:
Post a Comment