Pages

Friday, July 11, 2014

இராமாயணம் - மூலமே இல்லாத முதல்வன்

இராமாயணம் - மூலமே இல்லாத முதல்வன் 


எல்லாவற்றிர்க்கும் ஒரு தொடக்கமும் முடிவும் இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி என்றால் இறைவனுக்கும் ஒரு தொடக்கம் மற்றும் ஒரு முடிவு இருக்க வேண்டும் அல்லவா ?

கவந்தன் சிந்திக்கிறான்.

அவனுக்குள் சில கேள்விகள்.

நீ மூலமே இல்லாத முதல்வன். அனைத்திற்கும் முதல்வன் நீ. இந்த உலகம் நீ பல விதங்களில் முயன்று பார்க்கும் கோலோமோ ? இந்த உலகம் முழுவதும் இறைவனின் பல வித கோலங்கள். அப்படி என்றால் கடவுள் ஏன் இப்படி பல உருவங்கள் எடுத்து முயல வேண்டும்.

கடவுள் ஏன் அவற்றைச் செய்கிறான் என்பது யாராலும் அறிந்து கொள்ள முடியாத ஒன்று.

சரி, இந்த உலகம் தோன்றுவதற்கு முன் தோன்றினான் கடவுள். இந்த உலகம் அழியும் போது அவனும் அழிவானா ? அவன் நிலை என்ன ?

 ஊழிக் காலத்தில் இந்த உலகம் அனைத்தும் நீரால் சூழப் படும்போது, தனித்து நிற்கும் அந்த ஆல மரமோ, அல்லது அந்த மரத்தின் ஒரு இலையோ, இல்லை அதில் துயிலும் பாலகனோ, அந்த கடலே நீதானோ ? என்று இறைவனின் முடிவும் பற்றி  நம்மால் அறிய முடியாது  என்கிறான்.

அவன் மூலம். மூலம் இல்லாத மூலம். அவன் நமக்கு முந்தியவன் என்பதால் அவன் மூலத்தை நாம் அறிய முடியாது.

அடுத்து, அவன் பல விதங்களில் வெளிப்படுகிறான். அவன் எண்ணங்களை நாம் அறிய முடியாது.

ஊழிக் காலத்தில் அவன் என்ன ஆவான் என்று நாம் அறிய முடியாது.

இறைவனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியாது.  அது நம் சிற்றறிவுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லாமல்  சொல்கிறான்.


பாடல்

'மூலமே இல்லா முதல்வனே! 
     நீ முயலும் 
கோலமோ, யார்க்கும் தெரிவு 
     அரிய கொள்கையவால்; 
ஆலமோ? ஆலின் அடையோ? 
     அடைக் கிடந்த 
பாலனோ? வேலைப் 
     பரப்போ? பகராயே!


பொருள் 

'மூலமே இல்லா முதல்வனே! = மூலம் இல்லாத முதல்வனே 

நீ முயலும் கோலமோ = நீ முயன்று செய்யும் பல்வேறு கோலங்கள் இந்த உலகே

யார்க்கும் தெரிவு அரிய கொள்கையவால் = யாரும் அறிந்து கொள்ள முடியாத கொள்கையால் நீ இவற்றை செய்கிறாய்

ஆலமோ? = ஊழிக் கால கடலோ

ஆலின் அடையோ?  = ஆல மரத்தின் இலையோ

அடைக் கிடந்த பாலனோ? = அதில் கிடைந்த சிறு பாலகன் நீதானோ ?

வேலைப் பரப்போ? = ஒரு வேளை அந்த கடலோ நீ தானோ ?

பகராயே! = நீயே சொல்


கேள்விக் குறிகளாய் போட்டு அடுக்குகிறான். சந்தேகம் சந்தேகம். கந்தர்வனான அவனுக்கே சந்தேகம். 

இறை என்பது அறிய வேண்டிய ஒன்றல்ல போலிருக்கிறது. 

அது அறிய முடியாத ஒன்று. அறிவின் துணை கொண்டு அறிந்தே தீருவேன் என்று முனைவது வியர்த்தம். 



1 comment:

  1. ஹ்ம்... கடவுள் என்று ஒன்று இருப்பதாக நம்புபவர்க்கு இதெல்லாம் சரிதான்!

    ReplyDelete