Pages

Monday, July 28, 2014

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை

இனியவை நாற்பது - கூற்றம் வரவு உண்மை 


ஒருவனுக்கு ஒரு வேலை வரவில்லை என்றால் விட்டு விடவேண்டும். வரதா ஒன்றை செய் செய் என்று அவனை வற்புறுத்தக் கூடாது. அப்படி வற்புறுத்தாமல் இருப்பது இனிமையானது.

மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நினைவோடு வாழ்ந்தால் நல்லதே செய்யத் தோன்றும். எப்போது வேண்டுமானாலும் போய் விடுவோம். இருக்கும் வரை நாலு நல்லது செய்துவிட்டு போவோம். வாழ்வு ஒரு நாள் முடியும். கூற்றுவன் வருவது நிச்சயம் என்று எண்ணி வாழ்வது இனிமை.

இன்பமும், துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வம் வருவதும், போவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும். செல்வம் குறைந்த போது அறம் அல்லாதவற்றை கூறாமல் இருப்பது நலம்.

பாடல்

ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே
கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்க மழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.


சீர் பிரித்த பின்

ஆற்றானை ஆற்று என்று அழியாமை முன்இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வினியது இல்.

பொருள்

ஆற்றானை = ஒரு செயலை செய்ய முடியாதவனை

ஆற்று என்று  = செய் என்று  கூறி

அழியாமை முன்இனிதே = துன்பப்படாமல் இருப்பது இனிது

கூற்றம் = எமன்

வரவு = வருவது

உண்மை = உண்மை என்று

சிந்தித்து வாழ்வினிதே = சிந்தித்து வாழ்வது இனிது

இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி ஒருத்தருக்கும் தீவினை எண்ணாதே என்றார் பட்டினத்தார்

ஆக்கம் அழியினும் = செல்வம் அழிந்தாலும்

அல்லவை கூறாத = நல்லவை அல்லாதவற்றை கூறாமல் இருக்கும் 

தேர்ச்சியின் தேர்வினியது இல்.= தெளிந்த அறிவைப் போன்ற இனிமையானது  வேறு ஒன்றும் இல்லை. 

1 comment:

  1. என்ன ஒரு எளிமையான/இனிமையான பாடல். நம் முன்னோர்கள் எவ்வளவு நல்ல விஷயங்களை விட்டு சென்றிருக்கிறார்கள் . பின் பற்றுகிறோமோ இல்லையோ atleast இந்த பாடல்களை எல்லாம் தொலைக்காமல் இருந்தாலே போதும்.

    ReplyDelete