Pages

Monday, July 14, 2014

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை

கைம்மாறு கொடுத்தல் - இருகை யானை 


இதயத்தில் உள்ள ஒரு வால்வு பழுதாகி விட்டால் அதற்கு பதில் ஒரு செயற்கை வால்வு பொருத்துவார்கள். பல இலட்சங்கள் செலவாகும். அந்த வால்வை நமக்கு இலவசமாகத் தந்த கடவுளுக்கு என கைம்மாறு செய்வது ?

காலை எடுக்க ஒரு இலட்சம் கேட்கிறார்கள்...என்றால் காலைத் தந்தவனுக்கு எவ்வளவு தர வேண்டும் என்று முருகன் சந்நிதியில் சென்று விழுந்தார் கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.

இறைவன் தனக்கு தந்த ஒவ்வொன்றையும் எண்ணி அதற்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று உருகுகிறார் மணிவாசகர்.

பாடல்

இருகை யானையை ஒத்திருந் தென்உளக்
கருவை யான்கண்டி லேன்கண்ட தெவ்வமே
வருக என்று பணித்தனை வானுளோர்க்
கொருவ னேகிற்றி லேன்கிற்பன் உண்ணவே.

சீர் பிரித்த பின்

இருகை யானையை ஒத்திருந்த என் உள்ளக் 
கருவை யான் கண்டிலேன் கண்டது எவ்வமே 
வருக என்று பணித்தனை வானுளோர்கு 
ஒருவனே கிற்றிலேன் கிற்பன் உண்ணவே.

பொருள்

இருகை யானையை ஒத்திருந்து = மற்ற விலங்குகளுக்கு இல்லாத ஒரு வசதி யானைக்கு உண்டு...அது தான் அதற்கு அமைந்த கை. அந்தக் கையால் யாருக்கும் ஒன்றும் நல்லது செய்யாது. தனக்கு தனக்கு என்று எடுத்து உண்ணும். அதனால் அதை இருகை யானை என்றார். இருகை என்பது சற்று மரியாதை குறைவான ஒரு தொடர். இருகால் மாடே என்று பயனில்லாத மனிதர்களை குறிப்பிடுவார்கள்.

நமக்கு இரன்டு கைகள் இருக்கிறது. யாருக்காவது ஏதாவது தருகிறோமா ? எனக்கு எனக்கு என்று   எடுத்துக் கொள்வதிலேயே இருக்கிறோம்.

என் உள்ளக்  கருவை யான் கண்டிலேன் = என் உள்ளத்தின் கருவை, ஆணி வேரை நான் கண்டிலேன். எது உள்ளத்தின் ஆதி, அடிப்படை என்று அறியாமல் இருக்கிறேன்.

 கண்டது எவ்வமே = கண்டது எல்லாம் துன்பமே

வருக என்று பணித்தனை  = அப்படி இருக்கும் போது , என்னை வருக என்று நீ பணித்தாய்.

வானுளோர்கு ஒருவனே = வானில் உள்ளவர்களுக்கு ஒருவனே. ஒருவனே என்றால் நிகர் இல்லாதவன் என்று பொருள்


கிற்றிலேன் =  வலிமை இல்லாதவன்

கிற்பன் உண்ணவே. = இருக்கின்றேன் உலக இன்பங்களை அனுபவிக்கவே




1 comment:

  1. "இரு கை யானை" என்பது சுவையானது. யானை தும்பிக்கையால் பல வேலைகள் செய்வதால் இதை முழுவதும் ஒப்புக்கொள்வது கடினமானது - ஆனாலும் சுவையான கற்பனை.

    ReplyDelete