Pages

Sunday, August 24, 2014

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 1

இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 1


அசோக வனத்துக்கு இராவணன் வருகிறான்.

வந்து, சீதையின் முன்னால் பொன்னால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து அவளிடம் பேசத் தொடங்குகிறான்.

பேசினான் என்பதை விட, கொஞ்சுகிறான், கெஞ்சுகிறான்.

எப்போது தான் இந்த அடியேனுக்கு இரக்கம் காட்டுவாய் ? எப்போதுதான் இந்த இந்த நிலவுக்கும் சூரியனுக்கும் நான் வித்தியாசம் காண்பது, எப்போதுதான் நான் இந்த மன்மதனின் அம்புகளுக்கு பலி ஆகாமல் இருப்பது என்று மனதில் பட்டதை எல்லாம் எடுத்துச் சொல்கிறான்.

பாடல்

‘என்றுதான், அடியனேனுக்கு
    இரங்குவது? இந்து என்பான்
என்றுதான், இரவியோடும்
    வேற்றுமை தரெிவது என்பால்?
என்றுதான், அநங்க வாளிக்கு
    இலக்கு அலாது இருக்கல் ஆவது?
என்று, தான் உற்றது எல்லாம்
    இயம்புவான் எடுத்துக் கொண்டான்

பொருள் 

என்றுதான் = எப்போதுதான்
அடியனேனுக்கு = அடியவனான எனக்கு
இரங்குவது?  = இரக்கம் காட்டுவது ?

இந்து என்பான் = சந்திரன் என்பவன்

என்றுதான் = எப்போதுதான்

இரவியோடும் = சூரியனில் இருந்து

வேற்றுமை தெரிவது என்பால்? = வேற்றுமை காட்டுவது என்னிடம்

என்றுதான் = எப்போதுதான்

அநங்க வாளிக்கு = மன்மதனின் அம்புக்கு

இலக்கு அலாது இருக்கல் ஆவது? = இலக்கு ஆகாமல் நான் இருப்பது

என்று = என்று

தான் = அவன்

உற்றது எல்லாம் = மனதில் கொண்டதை எல்லாம்

இயம்புவான் எடுத்துக் கொண்டான் = சொல்லத் தொடங்கினான்.

இது பாட்டின் மேலோட்டமான பொருள்.

கொஞ்சம் உள்ளே போய் அதன் சுவையை அறிவோம்.

"அடியேன்" என்கிறான் இராவணன்.

இராவணன் யார் ?

முக்கோடி வாழ் நாளும்,
முயன்று உடைய பெரும் தவமும்,
எக்கோடி யாராலும் வெல்லப் படாய் என்ற வரமும்
நாரத முனிவர்கேற்ப நயம்பட உரைத்த நாவும்
திக்கொடு உலகு அனைத்தையும் வென்று அடக்கிய புய வலியும்

அது மட்டுமா

வாரணம் பொருத மார்பன்
வரையினை எடுத்த தோளன்
பத்துத் தலை
இருபது தோள்
சங்கரன் கொடுத்த வாள்

என்று அவன் பெருமை கணக்கில் அடங்காதது.

அவன், இந்த பெண்ணின் முன்னால் போய் "அடியேன் மேல் என்று தான் இரக்கம் கொள்வது " என்று கெஞ்சுகிறான்.

அவன் கைக்கு எட்டாத ஒன்றும் இந்த உலகில் இருக்கிறது. அது சீதையின் சம்மதம்.


என்றுதான், என்றுதான் என்று நான்கு முறை சொல்கிறான்.   

அதில் முதல் மூன்று முறை உள்ளதில் உள்ள 'தான்' என்ற சொல் அசைச் சொல்.

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாத சொல். பாடலில் இலக்கணம் மற்றும் ஒலி நயத்திற்காக சேர்ப்பது. 

என்றுதான் எனக்கு இரங்குவது என்ற தொடரில் 'தான்' என்ற சொல் இல்லா விட்டாலும்  அர்த்தம் மாறாது. 

"என்று எனக்கு இரங்குவது" என்றாலும் அதே பொருளைத்தான் தரும்.

"தான்" என்ற அகந்தை அர்த்தம் இல்லாதது தானே ?

கடைசியில் வரும் "என்று , தான் "  என்ற தொடர் "என்று, தான் நினைத்ததை சொல்லத் தொடங்கினான் " என்ற அர்த்தத்தில் வருகிறது. 

என்றுதான் எனக்கு இரங்குவது 
 
என்று - தான்   நினைத்ததை 

வார்த்தையில் விளையாடுகிறான் கம்பன். 

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எவ்வளவு பெரிய ஆளையும் காமம், காதல் எப்படி குழந்தையாக மாற்றி விடுகிறது ?

ஏன் என்று சிந்திப்போம். 

2 comments:

  1. "தான்" என்பது அழுத்தத்துக்காகக் கூட்டப்பட்ட சொல் அல்லவா? நாம் பேசும்போது கூட "என்னதான் சொன்னாலும் கேட்கவில்லை" என்று சொல்வதில்லையா?

    சூரியனும், சந்திரனும் இரண்டுமே அவனை எரிக்கின்றனவாம்!

    எவ்வளவுதான் பொருளும் புகழும் பெருமையும் இருந்தாலும் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை அடைய முடியாது.

    அருமையான பாடல். இந்த உரையாடலை இன்னும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ஆஹா......, அருமை..........என்ன ஒரு இனிமை ..........

    ReplyDelete