இராமாயணம் - இராவணன் - சீதை உரையாடல் - பாகம் 3
சீதையை அசோக வனத்தில் சந்தித்து இராவணன் அவளிடம் பேசுகிறான்.
மிக மிக மரியாதையுடன்...பேசுகிறான். கடைசியில் "அம்மா " என்று முடிக்கிறான்.
தோல்வி என்றால் என்ன என்றே தெரியாத என்னை தோற்கச் செய்தீர்.
சந்திரனை கொண்டு என்னை சுடும் படி செய்தீர்
தென்றால் என் மேனி வேர்க்கும்படி செய்தீர்
வைரம் போன்ற வலிய என் தோள்களை மெலிய வைத்தீர்
மன்மதனை என்னை வெற்றி கொள்ளச் செய்து அவனை மகிழ்வித்தீர்
துன்பத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்.
தேவர்களின் அச்சத்தை போக்கி வைத்தீர்
இன்னும் என்னென்ன செய்து தீர்க்கப் போகிறீர்களோ ...அம்மா
பாடல்
தோற்பித்தீர்; மதிக்கு மேனி சுடுவித்தீர்; தென்றல் தூற்ற
வேர்ப்பித்தீர்; வயிரத் தோளை மெலிவித்தீர்; வேனில்
வேளை
ஆர்ப்பித்தீர்; என்னை இன்னல் அறிவித்தீர்; அமரர்
அச்சம்
தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர்
அம்மா!
பொருள்
தோற்பித்தீர்; = என்னை தோற்கடித்தீர்
மதிக்கு மேனி சுடுவித்தீர் = சந்திரனைக் கொண்டு என் உடலை கொதிக்க வைத்தீர்
தென்றல் தூற்ற வேர்ப்பித்தீர் = தென்றலைக் கொண்டு என்னை வேர்பித்தீர்
வயிரத் தோளை மெலிவித்தீர் = வைரம் போன்ற தோளை மெலிய வைத்தீர்
வேனில் வேளை ஆர்ப்பித்தீர் =இள வேனில் கால மன்மதனை வெற்றிக் கொள்ளச் செய்து ஆரவாரம் கொள்ள வைத்தீர்
என்னை இன்னல் அறிவித்தீர் = எனக்கு துன்பத்தை அறிமுகம் செய்து வைத்தீர்
அமரர் அச்சம் தீர்ப்பித்தீர் = அமரர்களின் அச்சத்தை போக்கினீர். இராவணன் மெலிந்தான், துன்பத்தில் உழல்கிறான், மன்மதனின் பானத்துக்கு இலக்காகி விட்டான் என்று தேவர்கள் மகிழ்ந்தார்கள்
இன்னம் = இன்னமும்
என் என் செய்வித்துத் தீர்திர் = என்னென்ன செய்து தீர்கப் போகிறீர்களோ
அம்மா! = அம்மா !
இதை விடவும் காதலை மென்மையாகச் சொல்ல முடியுமா என்ன ? இதை விட ஒரு மனிதன் கீழே இறங்கி வர முடியுமா என்ன ?
ஒன்று மட்டும் தெரிகிறது....பெண் ஆணிடம் என்ன விரும்புகிறாள் என்று தெரிகிறது .....
ஹா! பெண் ஆணிடம் என்ன விரும்புகிறாள் என்று எப்படித் தெரிகிறது? இராவணன் இப்படிச் சொல்லியதால் ஒன்று சீதை மனம் நெகிழ்ந்துவிடவில்லையே!
ReplyDeleteஇப்படி ஒரு உரையாடல் கம்ப இராமாயணத்தில் இருப்பது கேள்வியே பட்டதில்லை. இதை எல்லாம் எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி.