இராமாயணம் - புலியை மான் வெல்வதா ?
நம் மகனையோ மகளையோ நாம் கடைசியாக எப்போது கட்டி அணைத்து நம் அன்பை வெளிப் படுத்தி இருக்கிறோம் ?
தசரதன் இராமனை கட்டி அணைத்து , "தன் தோள்களால் இராமனின் தோள்களை அளந்தான் " என்பான் கம்பன்.
இந்திரசித்து போரில் இறந்து போனான் என்ற செய்தியைக் கேட்டவுடன் இராவணன் புலம்புகிறான்.
ஐயோ, என்னை தழுவிக் கொள்ள மாட்டாயா என்று அவனின் ஒரு தலை புலம்பியது. இன்னொரு தலையோ, புலியை மான் வெல்வதா என்று அரற்றியது.
பாடல்
'எழுவின் கோலம் எழுதிய தோள்களால்
தழுவிக் கொள்கலையோ!' எனும், ஓர் தலை;
'உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே!
செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை.
பொருள்
'எழுவின் = எழு என்றால் இரும்புத் தூண். இரும்புத் தூண் போன்ற
கோலம் எழுதிய தோள்களால் = சந்தனம் போன்ற வாசனை திரவியங்கள் பூசிய தோள்களால்
தழுவிக் கொள்கலையோ! = தழுவிக் கொள்ள மாட்டாயா
எனும், ஓர் தலை = என்று புலம்பும் ஒரு தலை
'உழுவைப் போத்தை = ஆண் புலியை
உழை = பெண் மான்
உயிர் உண்பதே! = போராடி உயிரை பறிப்பதா ?
செழு வில் சேவகனே!' எனும், ஓர் தலை = வீரம் பொருந்திய செழுமையான வில்லை ஏந்தியவனே என்று புலம்பும் ஒரு தலை
No comments:
Post a Comment