Pages

Wednesday, September 10, 2014

இராமாயணம் - பிறன் பழி

இராமாயணம் -  பிறன் பழி 



ஒரு வீட்டில் கணவன் காலையில் செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய மனைவி காப்பியை கொண்டுவந்து மேஜை மேல் வைத்து விட்டுப் போகிறாள். கணவன் , செய்தித்தாள் படிக்கும் சுவாரசியத்தில் காப்பி கோப்பையை பார்க்கவில்லை. செய்தித் தாளை திருப்பும் போது கை தட்டி காப்பி கொட்டி  விடுகிறது.

அந்த சமயத்தில் ....

நிலை - 1

கணவன்: சனியனே, காப்பிய கைக் கிட்டவா கொண்டு வந்து வைப்ப ? எத எங்க வைக்கிறதுனு தெரியாது...என்று கத்துகிறான்...

மனைவி: கண்ணு என்ன பிடனியிலா இருக்கு ...முன்னாடிதான இருக்கு ? பாக்க வேண்டியது தான ?

இப்படி ஒருவரை ஒருவர் மாறி மாறி குத்தம் சொல்லி சண்டை வலுக்கிறது.

நிலை 2
 
கணவன்:  ஐயையோ ... நீ காப்பிய இங்க வச்சத நான் பார்க்கவே இல்ல. என் தப்புதான்... பாத்து இருக்கணும்.


மனைவி: நீங்க என்ன பண்ணுவீங்க...நான் அங்க வச்சிருக்க கூடாது...இல்லேன்னா வச்சத உங்க கிட்டயாவது சொல்லி இருக்கணும்....என் தப்புதான் ...


இப்படி ஒருவர் மற்றவரின் பழியை ஏற்றுக் கொண்டு மற்றவர் செய்த தவறுக்கு தான் நாணும் போது இல்லறம் இனிக்கும்.

ஒரு அலுவலகத்தில்

ஒரு ரிப்போர்ட்  அனுப்புகிறோம்.அதில் ஏதோ ஒரு தவறு இருந்து விடுகிறது. சரியாக பார்க்காமல் நாமும் அனுப்பி விடுகிறோம்.  மேலிடத்தில் கண்டு பிடித்து நம்மை திட்டுகிறான்.

நிலை 1

நாம் அந்த ரிபோர்டை தயார் செய்த ஆளை கூப்பிட்டு சத்தம்  போடுகிறோம்.அவனும் "சார், நான் தான் தப்பு பண்ணினேன், நீங்களாவது கண்டு பிடிசிருகலாம்ல " என்று நம்மை முறைக்கிறான்...

மாறாக

நிலை 2

நாம் அந்த ரிபோர்ட் தயார் செய்த  ஆளிடம்,"நீங்க தந்த ரிபோர்ட்ட நான்  சரியா படிக்காம அனுப்பிட்டேன்...அதுல ஏதோ தப்பு இருக்காம்...நான் ஒழுங்கா படிச்சிருக்கணும் "என்று  சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்....அவன் என்ன சொல்வான் "சாரி சார், தப்பு என் மேலதான், நான் சரியா செக் பண்ணி இருக்கணும் ...இனிமேல் ஜாக்கிரதையா இருப்பேன் "என்று சொல்வான்.

அவன் பழியை நாம் ஏற்று அதற்காக நாம் வெட்கப்  படும்போது, அவனும் அதை ஏற்று அவன் வெட்கப்  படுவான்.

அலுவலகம் இனிமையாக  இருக்கும்.

அதை விடுத்து ஒருவர் மேல் ஒருவர் குறை கூறிக் கொண்டிருந்தால் எதுவும் சரியாக  நடக்காது.

இன்று குடும்பங்களும், சமுதாயமும் சந்திக்கும் சிக்கல் இதுதான். யாரும் எதற்கும் பொறுப்பு எடுக்கத் தயாராக இல்லை. மற்றவனை குறை கூறியே பொழுதை போக்கி  விடுகிறார்கள்.

பிறருடைய பழிக்காக எவன் தான் நாணுவானோ அவன் நாணத்தின் உறைவிடம் என்பார் வள்ளுவர்.....

பாடல்

'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி' என்னும், உலகு.

 பொருள்

'பிறர் பழியும் = மற்றவர்களின் பழியையும்

தம் பழியும் = தன்னுடைய பழி என்றே

நாணுவார் = நாணுவார். நாணம் கொள்வார்

நாணுக்கு = நாணத்தின்

உறைபதி' = உறைவிடம்

என்னும், உலகு = என்று உலகம்

.சான்றோர்கள் மற்றவர்களின் தவறுகளை தங்களின் தவறு என்றே எண்ணி அதற்காக வெட்கப் படுவார்கள்.

மாறாக, முட்டாள்கள் தங்கள் தவறையும் மற்றவர்கள் தவறு என்றே கூறித்  திரிவார்கள்.

இயேசு நம்முடைய பாவங்களுக்காக சிலுவை சுமந்தார் என்று விவிலியம்  கூறும்.

இன்று முதல் உங்கள் கணவனோ, மனைவியோ - அவர்களின் குற்றத்தை உங்கள் குற்றமாக எண்ணி அவர்களிடம் பேசிப் பாருங்கள். எவ்வளவு பெரிய    மாற்றம்   குடும்பத்தில் நிகழ்கிறது என்று பாருங்கள்.

சரி,இதற்கும் வாலி வதைக்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கே ...


1 comment:

  1. மிகவும் அழகான, சிந்தித்துக் கடைப்பிடிக்க வேண்டிய கருத்து...மிகவும் நன்றி.

    ReplyDelete