Pages

Monday, September 15, 2014

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி

விவேக சிந்தாமணி - செவிக்கு கண் உரைத்த செய்தி 


(கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும். மற்றவர்கள் தயவு செய்து இதைப் படிக்க  வேண்டாம். பெண்ணின் உடல் அழகை வர்ணிக்கும் பாடல். கொஞ்சம் அதிகப்  படியாகவே. வெளிப்படையான வர்ணனைகளில் முகம் சுளிப்பவர்கள் படிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்)



அவளின் தொப்புளில் இருந்து கீழே செல்லும் வழியில் மெல்லிய கரிய முடி, கீழே செல்லச் செல்ல அடர்ந்து கருப்பாக உள்ளது. அது ஏதோ கரிய நாகம் படம் எடுத்து ஆடுவது போல இருக்கிறது. அந்த நாகம் கீழே இருந்து அவளின் முகத்தை பார்த்தது. அந்த முகம் நிலவு போல இருந்தது. நிலவைக் கண்டு நாகம் படம் எடுத்து ஆடியது.

ஆனால், அந்த நிலவை இரண்டு மலைக் குன்றுகள் மறைத்தன. உடனே அந்த கரு நாகம், அந்த தடையை அவளுடைய கண்களிடம் சொல்லியது. அந்த கண் நீண்டு காதுவரைப் போய் அந்த செய்தியை காதிடம் சொன்னது.

பாடல்

உந்தியின் சுழியின் கீழ் சேருரோமமாம் கரியநாகம் 
சந்திரன் எனவே எண்ணித் தையலாள் முகத்தை நோக்க 
மந்திர கிரிகள் விம்மி வழிமறித் திடுதல் கண்டு 
சிந்துரக் கயற் கண்ணோடிச் செவிதனக்கு உரைத்ததம்மா

பொருள்

உந்தியின்  = வயிற்றின்

சுழியின் = தொப்புளில்

கீழ் = கீழே

சேருரோமமாம் = சேருகின்ற ரோமங்கள்

கரியநாகம் = கரிய நாகம் படம் விரித்து ஆடுவதைப் போல இருக்கிறது

சந்திரன் எனவே = சந்திரன் என்று

எண்ணித் = நினைத்து

தையலாள் முகத்தை நோக்க = அந்த பெண்ணின் முகத்தை நோக்க

மந்திர கிரிகள் = மந்திரம் போன்ற இரண்டு மலைகள்

விம்மி = விம்மி

வழிமறித் திடுதல் கண்டு = பார்க்கும் வழியை மறைப்பது கண்டு

சிந்துரக்  = சிவந்த

கயற் = மீன் போன்ற

கண்ணோடிச்  = கண்ணோடு சொல்ல. அது

செவிதனக்கு உரைத்ததம்மா = செவியிடம் சொன்னது



1 comment: