Pages

Saturday, September 20, 2014

இராமாயணம் - அங்கதன் தூது - அம்பு விடு தூது

இராமாயணம் - அங்கதன் தூது - அம்பு விடு தூது 


போருக்கு முன் தூது விடுவோம் என்று இராமன் சொன்ன பின், அவனுடன் இருந்தவர்கள் அவர்கள் எண்ணத்தை கூறுகிறார்கள்.

வீடணன் "அது மிக அழகானது"  என்றான்.

சுக்ரீவன் "அரசர்களுக்கு ஏற்றது" என்றான்

இலக்குவன் "அவனிடம் அனுப்ப வேண்டியது சொல் அல்ல, அம்புகள்" என்றான்.

பாடல்


அரக்கர் கோன் அதனைக் கேட்டான், 'அழகிற்றே 
ஆகும்' என்றான்;

குரக்கினத்து இறைவன் நின்றான், 'கொற்றவர்க்கு
உற்றது' என்றான்;

'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்; 'இனி,  
நாம் அம்பு


துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ?
என்னச் சொன்னான்.

பொருள்

அரக்கர் கோன் = வீடணன்

அதனைக் கேட்டான் = இராமன் தூது அனுப்புவோம் என்ற சொல்லைக் கேட்டான்

'அழகிற்றே ஆகும்' என்றான் = அழகானது என்றான்

குரக்கினத்து இறைவன்  = குரங்கின தலைவன்

நின்றான் = எழுந்து நின்று

'கொற்றவர்க்கு உற்றது' என்றான் = அரசர்களுக்கு ஏற்றது என்றான்

'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன் =  இராவணன் மேல் இரக்கம் கொள்வது இழுக்கு என்றான்


'இனி,  நாம் அம்பு துரக்குவது அல்லால் = இனி நாம் அம்பு விடுவதைத் தவிர


வேறு ஓர் சொல் உண்டோ? = வேறு ஒரு சொல்லை விடுவது உண்டா

என்னச் சொன்னான் = என்று சொன்னான்

இதில் கவனிக்க வேண்டியது,


வீடணன்  கூறியது. இராவணனிடம் தூது  அனுப்பி,ஒரு வேளை இராவணன் சமாதானமாகப் போய் விட்டால், வீடணன் கதி என்ன  ஆகும்.

இராவணன், வீடணனை விட்டு வைப்பானா ?

இருந்தும் வீடணன் போரை தவிர்க்க விரும்புகிறான்.

வீடணனை பற்றி கூறும் போது


மேதாவிகட்கு எல்லாம்
    மேலாய மேன்மையான்

என்று கூறுவார்  கம்பர்.




No comments:

Post a Comment