Pages

Friday, September 26, 2014

திருக்குறள் - நீத்தார் பெருமை - நூல்களின் முடிவு

திருக்குறள் - நீத்தார் பெருமை - நூல்களின் முடிவு 



நம் நாடு, குறிப்பாக நம் தமிழ் சமுதாயம்  துறவிகளை கொண்டாடிய அளவு  வேறு எந்த நாடாவது, சமுதாயமாவது கொண்டாடி இருக்கிறதா என்று தெரியவில்லை.

துறவறம் ஏன் பெரிய விஷயம் ?

நீத்தார் பெருமை என்று வள்ளுவர் ஒரு அதிகாரமே வைத்து இருக்கிறார்.  அது போக துறவற இயல் என்று ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கிறார்.

ஏன் இவ்வளவு முக்கியத்வம் ?

அறம் முக்கியமானது என்று நமக்குத் தெரிகிறது. அற வழியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஆனால், எது அறம் என்று யார் எடுத்துச் சொல்வது ?

அப்படியே சொன்னாலும், சொல்லும் அந்த ஆளை நாம் எப்படி நம்புவது. அவன் சரியாகச் சொல்கிறானா ? அவனுக்கு இதில் ஏதாவது ஆதாயம் இருக்குமா என்று சிந்திப்போம்.

வாழ்க்கையில் எத்தனை சாமியார்களை பார்க்கிறோம். பெரிய பெரிய மடங்கள், பணம், ஆள், அம்பு, சேனை, கார், சொத்துக்கள்....இவர்கள் சொல்வதை எப்படி நம்புவது ?

எல்லாம் துறந்தவனுக்கு எதிலும் நாட்டம் இல்லை....

அவர்கள் அறத்தை உள்ளது உள்ளபடியே எடுத்துச் சொல்வார்கள் என்பதால் நீத்தார் (துறந்தார் ) மேல் அப்படி ஒரு மதிப்பு.

அது அப்படியே இருக்கட்டும்.

நாம் எவ்வளவோ பணம் செலவழிக்கிறோம். உணவு, உடை என்ற அடிப்படை தேவைகள் தவிர எவ்வளவோ செலவழிக்கிறோம்....கார் வாங்குகிறோம், வீடு, நகை, அயல் நாடுகளுக்கு ஊர் சுற்றுகிறோம்...

அதில், நல்லவர்களை சென்று காண, அவர்கள் சொல்வதை கேட்க எவ்வளவு செலவழிக்கிறோம் ?

நாம் செலவழிக்கும் பணத்திற்கு அதிக பட்ச நன்மை என்றால் அது நல்லவர்களை கண்டு அவர்கள் சொல்வதை  கேட்பது  தான் என்பது உலகியல் உள்ள அனைத்து நூல்களின் முடிவு என்கிறது வள்ளுவம்.


பாடல்

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு.

பொருள்

ஒழுக்கத்து = ஒழுக்கத்தின் வழி நின்று

நீத்தார் பெருமை = பற்றுகளை நீக்கியவர்களது பெருமை

விழுப்பத்து = சிறந்த பொருள்கள் அனைத்திலும்

வேண்டும் = அதுவே வேண்டும்

பனுவற் றுணிவு.= என்பது அனைத்து நூல்களின் முடிவு


குறளின் ஆழ்ந்த அர்த்தத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.


No comments:

Post a Comment