Pages

Friday, September 5, 2014

இராமாயணம் - ஊசி போன்ற அம்பு

இராமாயணம் - ஊசி போன்ற அம்பு 


உவமைகளில் கையாள்வதில் கம்பனுக்கு நிகர்  கம்பனே.

மறைந்து நின்று வாலி மேல் இராமன் அம்பை எய்து விடுகிறான். அந்த அம்புக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும்.

உவமை என்பது உவமேயத்தை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும்.

இங்கே இராமனின் அம்புக்கு கம்பன் ஊசியை உதாரணம் சொல்கிறான்.  வாழைப் பழத்தில் செல்லும் ஊசி போல சென்றது என்று  சொல்லுகிறான்.

முதலில் பாடலையும் அதன் பொருளையும் பார்த்து விடுவோம். பின் அந்த உவமையின் நயத்தைப்  பற்றி  சிந்திப்போம்.


பாடல்

காரும் வார் சுவைக் கதலியின்
    கனியினைக் கழியச்
சேரும் ஊசியிற் சென்றது
    நின்றது என் செப்ப?
நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை அப் பகழி.


பொருள்

காரும் வார் சுவைக் = கனிந்த மிகுந்த சுவை மிக்க

கதலியின் = வாழைப் பழத்தின்

கனியினைக் = கனியினை

கழியச் சேரும் = ஊடுருவிச் செல்லும்

 ஊசியிற் சென்றது = ஊசி போல சென்றது
   
நின்றது = பின் நின்றது

என் செப்ப? = என்ன சொல்ல

நீரும், = நீரும்

நீர்தரு நெருப்பும் = நீரில் இருந்து தோன்றிய நெருப்பும்

வன் காற்றும் = வன்மையான காற்றும்

கீழ் நிமிர்ந்த பாரும் = கீழே உள்ள நிலமும் 

சார் வலி படைத்தவன் = அனைத்தின் வலிமையையும் படைத்தவன் (வாலி)

உரத்தை = வலிமையை

அப் பகழி = அந்த அம்பு

இதில் சில அருமையான விஷயங்கள் புதைந்து  கிடக்கிறது. தோண்டி   எடுப்போம்.

முதலாவது:

இராமனின் அம்புக்கு மின்னலை, இடியை, உதாரணம் சொல்லி  இருக்கலாம். கம்பனுக்குத் தெரியாத  உவமையா. ஒரு சிறிய ஊசிக்கு உதாரணம் சொல்லுகிறான்.  தவறான ஒரு காரியத்தை செய்யும் போது எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் கூனி குறுகிப் போவதைப் போல, அவ்வளவு பெரிய வலிமை மிக்க பானம், மறைந்து இருந்து செலுத்தப் பட்டதால் கூனி குறுகி ஊசி போல ஆகி விட்டது.  யாசகம் கேட்டு வந்த போது உலகளந்த பெருமாளே குறுகி மூன்றடி உள்ள வாமனனாகத்தானே வந்தான்.


இரண்டாவது:

நாம் தான் ஊசி வாங்கி வருகிறோம். நாம் தான் அதை கொண்டு தைக்கிறோம். இருந்தாலும் சில சமயம் அது நம் கையில் குத்தி விடுகிறது அல்லவா ? அது போல, இராமனின் பானம்தான் , விட்டதும் இராமன் தான். இருந்தாலும் அது அவனின்  புகழை குத்தியது என்று கம்பன் சொல்லாமல் சொல்கிறான்.

மூன்றாவது,

இராம பானம் இலக்கை தாக்காமல் விடாது. இராமனின் குறி தப்பாது. இங்கே இராமன் விட்ட அம்பு வாலியின் மார்பில் தைத்தது. தைத்த பின், அந்த அம்புக்கே ஒரு கணம் குழப்பம் வந்து விட்டது. நாம் செய்வது சரியா தவறா என்று. இது இராமன் செய்தது தானா ? வாலியை கொல்ல விட்ட அம்புதானா ? ஒரு நிராயுதபாணி மேலா இராமன் என்னை விடுத்தான் என்று தயங்கி நின்று விட்டது அந்த அம்பு.

"ஊசியிற் சென்றது,  நின்றது, என் செப்ப?"

வாலி பிடித்து நிறுத்தவில்லை. அதுவே தானாக  நின்று விட்டது.


நான்காவது;

ஒரு நல்லவன், உயர்ந்தவன், நாம் மரியாதை வைத்திருக்கும் ஒருவன், ஒரு தவறான  காரியத்தை செய்து விட்டான் என்று நாம் கேள்விப் பட்டால் நம் நிலைமை எப்படி இருக்கும் ? "அவனா, அப்படியா செய்தான்... என்னத்தச் சொல்ல ...இப்படியும் கூட நடக்குமா "என்று நாம் திகைத்து வாயடைத்துப் போவோம் அல்லவா. 

அது போல, இராமனின் அந்த செய்கையை கண்டு இராம பக்தனான கம்பனே வாயடைத்துப் போகிறான்.


என்னத்தச் சொல்ல என்று வாய் விட்டே புலம்புகிறார்.

"ஊசியிற் சென்றது  நின்றது என் செப்ப?"

நான் என்ன சொல்லட்டும் என்று கவிச் சக்ரவர்த்தியே திகைத்து நின்ற இடம். வார்த்தை  வரவில்லை.

ஐந்தாவது

இராமனின் பானத்தை ஊசிக்கு உவமை சொன்ன கம்பன், ஆரம்பத்தில் வாலியின்  மார்பை கனிந்த , சுவை மிகுந்த வாழைப் பழத்திற்கு உதாரணம் சொல்கிறான்.  பஞ்சு என்று சொல்லி இருக்கலாம். அவன் மனம் கனிந்தவன் , இனிமையானவன் என்று சொல்ல நினைத்த கம்பன் கனிந்த சுவை மிகுந்த வாழைப் பழத்தை  சொன்னான்.  அவனுக்கே சந்தேகம் வந்து விட்டது. ஒரு வேளை  மக்கள் வாலியின் மார்பு அப்படி ஒன்று வலிமையானது இல்லை என்று நினைத்து விடுவார்களோ என்று நினைத்து பின்னால் இரண்டு வரியைச் சேர்க்கிறான்.

நீரும், நீர்தரு நெருப்பும், வன்
    காற்றும், கீழ் நிமிர்ந்த
பாரும் சார் வலி படைத்தவன்
    உரத்தை 


 நீர்,நெருப்பு, காற்று, நிலம், வானம் என்ற ஐந்து பூதங்களின் வலிமையை ஒன்றாகக் கொண்டவன் வாலி என்று அந்த ஐயத்தைப் போக்குகிறான்.

ஆறாவது

இப்போது இரண்டையும் ஒத்துப் பாருங்கள். ஒரு புறம் மிக மிக வலிமை மிக்க வாலி,  இன்னொரு புறம் ஊசி போன்ற சிறிய இராம பானம்.  எது உயர்ந்ததாகத் தெரிகிறது ?

எவ்வளவு அர்த்தம் செறிந்த பாடல் !





2 comments:

  1. ///நீரும், நீர்தரு நெருப்பும்,..////

    நீரிலிருந்து எவ்விதம் நெருப்பு தோன்றும்; விளங்கவில்லை.

    ReplyDelete
  2. Ramakrishnan VenkataramanSeptember 7, 2014 at 1:10 AM

    யான் தங்களின் ரசிகன்.

    யான் அறிந்தவரையில், (புலவர் கீரன் உரை மற்றும் பல விளக்கங்கள் மூலம்)

    வாலி ஐம்பூதங்களின் வலிமையை ஒருங்கே பெற்றவனல்லன்.
    (நீரும், நீர் தரு நெருப்பும், வன் காற்றும், கீழ் நிவந்த பாரும்) நான்கு பூதங்களின் வலிமையை ஒருங்கே (சார் என்பதற்கு ஒருங்கே என்று பொருள் கொள்ளவேண்டும்) பெற்றவன். வானம் என்னும் ஐந்தாம் பூதத்தின் வலிமையை வாலி பெற்றவனல்லன்.

    ஏன் வாலிக்கு வானம் வசப்படவில்லை?

    இதன் விளக்கத்தை நான் இன்று வரை பல இடங்களில் தேடி வருகிறேன். எங்கும் கிடைக்க வில்லை.

    ReplyDelete